திராவிட தலைவர்களின் சிலையை பாதுகாக்கும் போலீஸ்!
Police to protect statue of Dravidian leaders
சென்னையில் திராவிட தலைவர்கள் சிலைகளின் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு!
இந்து மதத்தைப் பற்றி இழிவாக பேசிய ஆ.ராசாவை கண்டித்து பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக கோவையில் இந்து முன்னணி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஆ.ராசாவை பாஜக மாவட்ட தலைவர் பாலாஜி உத்தமராஜா மிக இழிவாக பேசியிருந்தார். இதன் காரணமாக அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதனை கண்டித்து பாஜகவினர் நேற்று கோவையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார். அந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜகவைச் சேர்ந்த பல்வேறு நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் நேற்று இரவு விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே புதுச்சேரி விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அண்ணாவின் சிலைக்கு செருப்பு மாலை மற்றும் கரும்புள்ளி வைக்கப்பட்ட ஆ.ராசாவின் புகைப்படம் சிலையின் கழுத்தில் மாட்டபட்டிருந்தது. சம்பவத்தை அறிந்த போலீசார் அப்பகுதியில் விரைந்து சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
இந்த சம்பவத்தின் எதிரொலியாக சென்னை முழுவதும் உள்ள அண்ணா மற்றும் பெரியார் சிலைகளின் முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இது போன்ற சம்பவங்கள் நடைபெறும் என்பதால் அனைத்து மாவட்ட காவல் துறையினருக்கும் திராவிட தலைவர்களின் சிலைகளுக்கு பாதுகாப்பு வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
English Summary
Police to protect statue of Dravidian leaders