தம்பி சுஜின் மீது கொடுந்தாக்குதல் - கொந்தளிப்பில் சீமான்.! - Seithipunal
Seithipunal


கனிமவளக் கொள்ளையைத் தடுக்கப் போராடிய நாம் தமிழர் கட்சிப் பொறுப்பாளர் தம்பி சுஜின் மீது கொடுந்தாக்குதல் நடத்தியுள்ள குமரி மாவட்ட காவல்துறையின் செயல் காட்டுமிராண்டித்தனமானது என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், "கேரளாவுக்குக் கனிமவளங்களைக் கடத்தி செல்வதைத் தடுத்து நிறுத்தக்கோரி போராடிய குமரி மாவட்ட நாம் தமிழர் பிள்ளைகள் மீது கொடுந்தாக்குதலை நடத்திய காவல்துறையினரின் காட்டுமிராண்டித்தனமான செயல் பெரும் அதிர்ச்சியளிக்கிறது. 

கனிம வளங்களைக் கொள்ளையடிப்பவர்களைத் தடுத்து நிறுத்த வக்கற்ற திமுக அரசு, போராடும் இளம் பிள்ளைகள் மீது காவல்துறையை ஏவி அவர்களை அடித்துத் துன்புறுத்தி, மிரட்டுவது வன்மையான கண்டனத்திற்குரியது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இயற்கையின் கொடையாக விளங்கும் மேற்குத் தொடர்ச்சி மலையை உடைத்து, ஆளும் திமுக அரசின் துணையுடன் கேரளாவிற்குத் தொடர்ச்சியாகக் கனிமவளங்கள் கடத்தப்பட்டுகிறது. மனிதர்களால் உருவாக்கவே முடியாத வருங்காலத் தலைமுறைகளின் சொத்தாகிய மலைகளைக் காப்பதற்காக மக்கள் இராணுவம்போல் குமரி மாவட்ட நாம் தமிழர் கட்சி பல்வேறு கட்டப் போராட்டங்களைத் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றது. 

மண்ணின் வளத்தையும், மக்கள் நலத்தையும் காப்பதற்கு நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும் போராட்டங்களுக்கு நாளுக்கு நாள் மக்கள் ஆதரவும் வருகிறது. இதனைப் பொறுத்துக்கொள்ள முடியாத அதிகாரவர்க்கத்தினர் நாம் தமிழர் கட்சியினர் மீது பொய்க்குற்றம் சுமத்தி அவர்களை அடக்கி ஒடுக்க முற்படுவது அண்மைக்காலமாகத் தொடர்கதையாகி விட்டது.

இந்நிலையில், நேற்றிரவு (24.03.2022) குமரி மாவட்டம் இரவிபுதூர்கடை பகுதியில் கனிம வளத்தைக் கடத்திச் சென்ற கனரகப் பாரவுந்து ஒருவரின் மீது இடித்துவிட்டு நிறுத்தாமல் சென்றிருக்கின்றது. உயிருக்கு ஆபத்தான நிலையிலிருந்த அந்த நபர் மருத்துவமனையில் சேர்க்கப்பபட்டுள்ளார். இதனால் கோபமடைந்த பொதுமக்கள் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் கனிமவளங்களைக் கொண்டு செல்லும் கனரக வாகனங்களை உடனடியாகத் தடுத்து நிறுத்தக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் பேச்சுவார்த்தை நடத்த நிகழ்விடத்திற்கு வந்த காவல்துறையினர், நாம் தமிழர் கட்சியின் பத்மநாபபுரம் தொகுதி கையூட்டு மற்றும் ஊழல் ஒழிப்புப் பாசறைச் செயலாளர் சுஜின் அவர்களை வலுக்கட்டாயமாக வாகனத்தில் ஏற்றியதோடு, ‘இதற்கெல்லாம் காரணம் உங்கள் நாம் தமிழர் கட்சிதான்’ என்றுகூறி அவருடைய கண், முகம், கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான தாக்குதலை நடத்தி காயப்படுத்தி தக்கலை காவல்நிலையத்திற்கு இழுத்துச் சென்றுள்ளனர்.

மேலும், இதுகுறித்து விசாரிக்கக் காவல்நிலையத்திற்குச் சென்ற நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர்களிடம் ‘நாம் தமிழர் கட்சியின் கனிமவள கொள்ளைக்கெதிரான போராட்டத்தால் காவல்துறை கடும் நெருக்கடிக்கு உள்ளாவதாகவும், மேற்கொண்டு கனிமவளக் கொள்ளைக்கு எதிராக நாம் தமிழர் கட்சி போராடக்கூடாதென்றும், மீண்டும் போராட்டத்தைத் தொடர்ந்தால் ஒவ்வொரு பொறுப்பாளர்களையும் குறிவைத்துத் தாக்குவோம்’ என்றும் காவல்துறையினர் ரௌடிகளைப் போலக் கூறியிருப்பது காவல்துறை மக்களுக்கானதா? அல்லது கனிமவளக் கொள்ளையர்களுக்கானதா? என்ற ஐயத்தை எழுப்புகிறது.

அதுமட்டுமின்றி, மதிப்பிற்குரிய இடத்தில் இருக்கும் காவல்துறை அதிகாரிகளே நாம் தமிழர் கட்சியையும், பொறுப்பாளர்களையும் தரக்குறைவாகப் பேசி விமர்சிப்பது சிறிதும் நாகரிகமற்ற செயலாகும். கனிமவளக் கொள்ளையைத் தடுத்து நிறுத்த வேண்டிய காவல்துறையினர் தங்கள் கடமையை நேர்மையாக ஆற்றாமல், கனிம வளக்கொள்ளையினருக்கும், தனியார் பெருமுதலாளிகளுக்கும் ஆதரவாக நிற்பதோடு, மக்களுக்காக அறவழியில் போராடும் நாம் தமிழர் கட்சியினரைப் பகிரங்கமாக மிரட்டுவதும், தாக்குவதும் எவ்வகையிலும் ஏற்புடையதல்ல.

குமரி மாவட்ட காவல்துறையின் சிறிதும் மனச்சான்றற்ற இத்தகைய மக்கள் விரோதக் கொடுஞ்செயல்கள், ஒட்டு மொத்த காவல்துறையின் மீதான நன்மதிப்பையும், நம்பிக்கையையும் கெடுத்து, தீரா களங்கத்தை ஏற்படுத்துகிறது. சனநாயகத்தில் ஆட்சி, அதிகாரம் ஒருபோதும் நிலையானதல்ல என்பதையும், மக்கள் சக்தியே என்றைக்கும் நிலையானது என்பதையும் காவல்துறையினர் நினைவில் வைத்து சிறிதளவாது நியாயமாக நடக்க முற்பட வேண்டும். 

இதற்கு மேலும், கனிமவள கொள்ளையைத் தடுத்த நிறுத்த போராடும் நாம் தமிழர் பிள்ளைகள் மீது உடலளவிலோ, மனதளவிலோ தாக்குதல்களைத் தொடுத்துக் காயப்படுத்தினால் அவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கான முழுப் பொறுப்பையும் தமிழ்நாடு அரசும், காவல்துறையுமே ஏற்கவேண்டும்.

ஆகவே, தமிழ்நாடு அரசு இவ்விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு, நாம் தமிழர் கட்சியின் பொறுப்பாளர் தம்பி சுஜின் மீது கொடுந்தாக்குதல் நடத்திய தக்கலை காவல்துறையினர் மீது உடனடியாகச் சட்டப்படி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், குமரி மாவட்டத்தில் தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் கனிமவளக் கொள்ளையை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டுமென்றும் நாம் தமிழர் கட்சி சார்பாகக் வலியுறுத்துகிறேன். 

நாம் தமிழர் கட்சியினர் மீதான காவல்துறையின் அதிகார அத்துமீறல்கள் இனியும் தொடர்ந்தால் மாநிலம் தழுவிய மக்கள் திரள் தொடர்ப் போராட்டங்களையும் சட்டப்போராட்டங்களையும் நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும் என்றும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் சீமான் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

seeman say about police attack sujin


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->