மீண்டும் மனு தாக்கல் செய்த செந்தில் பாலாஜி - வங்கி ஆவணங்களை 'தடயவியல்' சோதனைக்கு உட்படுத்தக் கோரிக்கை..!!
Senthil Balaji Asking Forensic Examination For Bank Documents By Another Petition
தனக்கு வழங்கப்பட்ட வங்கி ஆவணங்களை தடயவியல் சோதனைக்கு உட்படுத்தக் கோரி செந்தில் பாலாஜி மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளார்.
சட்ட விரோதமாக பணப் பரிமாற்றம் செய்யப்பட்ட குற்றச்சாட்டில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த ஓராண்டுக்கு மேலாக ஜாமீன் கிடைக்காமல் சிறையில் உள்ளார். இந்நிலையில் கரூர் சிட்டி யூனியன் வங்கியின் கவரிங் லெட்டர் தொடர்பான வங்கி ஆவணங்களின் நகலை தனக்கு வழங்க வேண்டும் என்று செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த முதன்மை அமர்வு நீதிபதி அல்லி, இது தொடர்பான ஆவணங்களை செந்தில் பாலாஜிக்கு வழங்கிட அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து இந்த ஆவணங்களை பெறுவதற்காக புழல் சிறையில் இருந்து இன்று நீதிபதி அல்லி முன்பு ஆஜர்படுத்தப்பட்ட செந்தில் பாலாஜி, அந்த ஆவணங்களை பெற்றுக்கொண்ட பின்னர் , மீண்டும் புழல் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இந்நிலையில் தன்னை வழக்கில் இருந்து விடுவிக்க கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவின் மீது இன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி அறிவித்திருந்த நிலையில், இன்று புதிதாக இரண்டு மனுக்களை செந்தில் பாலாஜி தாக்கல் செய்துள்ளார்.
அதில், "சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்யப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் தனக்கு வழங்கப்பட்ட வங்கி ஆவணங்களை தடயவியல் சோதனைக்கு உட்படுத்த வேண்டும். அந்த ஆவணங்களின் உண்மைத் தன்மையை ஆராய்வதோடு, தங்கள் தரப்பு வாதங்களை மீண்டும் கேட்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அமலாக்கத்துறை ஜூலை 18ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
English Summary
Senthil Balaji Asking Forensic Examination For Bank Documents By Another Petition