தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் - திமுக கூட்டணி கட்சி வலியுறுத்தல்.!
Tamil Nadu government implement the order of the National Green Tribunal
இறால் பண்ணைகள் குறித்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை முன்வைத்து தமிழகம் முழுவதும் இறால் பண்ணைகளை முறைப்படுத்த வேண்டும் என்று, தமிழக அரசுக்கு சிபிஐ (எம்) வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில், "சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் சித்தேரி நீர்நிலைக்கு அருகிலும், பழவேற்காடு ஏரிக்கு அருகிலும் உள்ள திருவள்ளூர் மாவட்டம், பாக்கம் கிராமத்தில் உள்ள சட்டவிரோத இறால் பண்ணைகளை மூட உத்தரவிட்டுள்ளது. இந்த பண்ணைகள் கடலோர மீன்வளர்ப்பு ஆணைய சட்டம் 2005ஐ மீறும் வகையில் பதிவு செய்யப்படாமல் இருந்ததையொட்டி இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கடலோர மீன்வளர்ப்பு ஆணைய சட்டத்தை மீறியவர்கள் மீது வழக்கு தொடுக்கவும், கடந்த கால விதிமீறல்களுக்கான இழப்பீட்டுத் தொகையை மதிப்பிடவும் கடலோர மீன்வளர்ப்பு ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பு வரவேற்கத்தக்கது.
ஆனால், இதேபோன்று தமிழகத்தில் ராமேஸ்வரம், பிச்சாவரம், நாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு கடலோர பகுதிகளில் இறால் பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் மிகப்பெரும்பாலானவை சட்டவிரோதமாக செயல்படுகின்றன. ஒரே அனுமதி ஆணையின்றி பல இறால் பண்ணைகளை நடத்துவது ராமேஸ்வரம் பகுதியில் இயல்பாக இருக்கிறது. இதேபோன்று அரசு அனுமதிபெற்று நடத்தப்படும் இறால் பண்ணைகளும் கடலோர மீன் வளர்ப்பு ஆணையச் சட்டம் 2005ல் அனைத்து விதிகளையும் பின்பற்றி செயல்படுவது கிடையாது.
இதனால் நீர்வளம் பாதிக்கப்பட்டு குடிநீர் ஆதாரங்கள் பயன்பாட்டிற்கு உகந்தவையாக இல்லாமல் போய்விடுகின்றன. மண் வளம் பாதிக்கப்பட்டு இதர பயிர் வளர்ப்புக்கும் குந்தகம் விளைவிப்பதாக இறால் பண்ணைகள் மாறி விடுகின்றன. மேலும் கடல்வாழ் உயிரினங்களும், சுற்றுச்சூழலும் பாதிக்கப்பட்டு மீனவர்களின் வாழ்வாதாரமும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது.
அதீத லாபத்திற்காக தவறான உணவூட்டி இறால் குஞ்சுகளை வளர்ப்பதும் பல இடங்களில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இவையெல்லாம் மிக கடுமையான நீண்ட கால பாதிப்புகளை உருவாக்கக் கூடியது. இதுகுறித்து எங்கள் கட்சியின் சட்டமன்றக்குழு தலைவர் தோழர் நாகை மாலி அவர்கள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்து 27.4.2022 அன்று சட்டப்பேரவையில் நடைபெற்ற விவாதத்தில் வலியுறுத்தி பேசியுள்ளார்.
எனவே, தமிழ்நாடு முழுவதும் கடலோரப் பகுதிகளில் உள்ள இறால் பண்ணைகள் குறித்து உண்மையான விபரங்களை அறியவும், அத்துமீறல்களை தடுத்து நிறுத்தவும், சட்டவிரோத இறால் பண்ணைகளை மூடவும் சட்டப்படியான இறால் பண்ணைகளாக இருந்தாலும் அவை சுற்றுச்சூழலுக்கும், விவசாயத்திற்கும், மீனவர்களுக்கும் ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கவும், இதற்கென அதிகாரிகள் மற்றும் விவசாயிகள், மீனவர்கள் மற்றும் அக்கறை கொண்ட ஒரு குழுவை அமைத்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது"
இவ்வாறு அந்த அறிக்கையில் கே பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
English Summary
Tamil Nadu government implement the order of the National Green Tribunal