திருநெல்வேலி மாவட்ட பாஜக தலைவர் மற்றும் பொது செயலாளர் கட்சியிலிருந்து திடீர் விலகல்..!
Tirunelveli District BJP President and General Secretary Sudden Quit the Party
நெல்லை வடக்கு மாவட்ட பாஜக தலைவர் தயாசங்கரும், பொதுசெயலாளர் வேல் ஆறுமுகமும் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.
தமிழகத்தில் பாஜகவில் புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான நடவடிக்கைகள் கடந்த சில வாரங்களாகவே மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் வடக்கு மாவட்ட தலைவராக தயாசங்கரும், பொதுசெயலராக வேல் ஆறுமுகமும், தெற்கு மாவட்ட தலைவராக தமிழ்ச்செல்வனும் பொறுப்பு வகித்து வருகிறார்கள்.
இந்நிலையில் திருநெல்வேலி மாவட்ட நிர்வாகிகளை தேர்வு செய்வது தொடர்பாக சமீபத்தில் நடத்தப்பட்ட கூட்டத்தில் தற்போதைய வடக்கு மாவட்ட தலைவர் தயாசங்கருக்கு ஆதரவாக பெரும்பாலானோர் ஆதரவு தெரிவித்திருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் கட்சி தலைமையோ வேறு சிலரின் பெயர்களை பரிசீலிப்பதாக சொல்லப்படுகிறது.
இதனால் தயாசங்கர் அதிருப்தி அடைந்துள்ளார். மேலும், தான் கட்சியிலிருந்து விலகுவதாக தனது முகநூல் பக்கத்தில் அறிவிப்பை வெளியிடுள்ளார். அதில், ‘இத்துடன் பாஜகவில் எனது அரசியல் பயணம் முடிவடைகிறது. என்னுடன் இதுவரை பயணித்த சகோதர சகோதரிகளுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று அவர் பதிவிட்டுள்ளார்.
அதேபோல வடக்கு மாவட்ட பொதுசெயலாளர் வேல் ஆறுமுகமும், கட்சியிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்வதாக தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டார். அடுத்தடுத்து இரு நிர்வாகிகள் பாஜக-வில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளமை கட்சிக்குள் என்ன நடக்கிறது என்ற கோணத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக வேல் ஆறுமுகம் அவர்கள் பேசியதாவது; ‘கடந்த 18 ஆண்டுகளாக கட்சியில் உழைத்துள்ளேன். கட்சியில் உண்மையாக உழைத்தவர்கள், கட்சி நிர்வாகிகள் மத்தியில் செல்வாக்கு உள்ளவர்கள் என்று மாவட்ட நிர்வாகிகளை தேர்வு செய்யாமல், கட்சியில் வேலை செய்யாதவர்களை முக்கிய பொறுப்புகளுக்கு பரிந்துரை செய்துள்ளது அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. எங்களை வேட்பு மனுகூட தாக்கல் செய்யக்கூடாது என்று தெரிவித்து ஓரங்கட்டியிருக்கிறார்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Tirunelveli District BJP President and General Secretary Sudden Quit the Party