ஸ்டாலினுக்கு 2026-ல் எதிர்க்கட்சி தலைவர் பதவியை பரிசாக கொடுப்போம்! தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் கொடுத்த அதிர்ச்சி!
TN Govt Staffs Sangam warn to DMK Head CM Stalin 2026 Election
முதல்வர் ஸ்டாலினுக்கு வரும் 2026-ல் எதிர்க்கட்சி தலைவர் பதவியை பரிசாக கொடுப்போம் என்று, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்த அறிக்கையில், "கடந்த காலங்களில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராடிய இடத்திற்கெல்லாம் தேடி வந்து நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ‘தேனாறும், பாலாறும் ஓடும்’ என்றவாறு தமிழக முதல்வர் வாக்குறுதி அளித்தார். 2021-ல் சட்டமன்றத் தேர்தலின்போது புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வுதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம் என வாக்குறுதி அளித்தார்.
ஆட்சிக்கு வந்து மூன்றரை ஆண்டுகளாகியும் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. மாறாக, 24 மாதகால அகவிலைப்படி, ஊக்க ஊதிய உயர்வு, ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு, கருணை அடிப்படையிலான பணி நியமனம் ஆகியவற்றை முடக்கி, அரசு ஊழியர்களின் அனைத்து உரிமைகளையும் பறித்தது தான் அவரின் சாதனையாக உள்ளது.
தலைமைச் செயலகத்தில் நேற்று முன்தினம் நடந்த பள்ளிக் கல்வித் துறை ஆய்வு கூட்டத்தில் தமிழக முதல்வர் நிதிசாராத கோரிக்கைகளை மட்டுமே நிறைவேற்ற உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது. பழைய ஓய்வூதியத்திட்டம் உள்ளிட்ட நிதிசார்ந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ளதன் மூலம் அரசு ஊழியர்களுக்கு துரோகம் இழைத்துள்ளார்.
உண்மையிலேயே நிதி நிலை மோசமாக உள்ளது என்றால், நிதி நிலை சரியாகும் வரை எங்ளுக்கு ஊதியம் வேண்டாம் என்று தமிழக முதல்வர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் அறிவிப்பார்களா? அரசு ஊழியர்கள், ஆசிரியர்களிடம் பிடித்தம் செய்த சிபிஎஸ் சந்தா தொகை தமிழக அரசால் தவறுதலாக கையாளப்பட்டுக் கொண்டிருக்கிறது.
போக்குவரத்துத்துறை ஊழியர்கள் தற்போது ஓய்வூதியப் பலன்கள் கிடைக்காமல் பரிதவிக்கும் நிலை அரசு ஊழியர்களுக்கும் வரப்போகிறது. எதிர்க்கட்சித் தலைவராக இருந்தால் மட்டுமே அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை தமிழக முதல்வர் சந்தித்துப் பேசுவார் என்றால், 2026 தேர்தலில் அதை அவருக்கு பரிசளிக்க தயாராக இருக்கிறோம் என்பதை சொல்ல கடமைப்பட்டுள்ளோம்” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
TN Govt Staffs Sangam warn to DMK Head CM Stalin 2026 Election