இடஒதுக்கீட்டை ரத்து செய்யவேண்டும் - ராகுல்காந்தி பேச்சுக்கு வானதி சீனிவாசன் கடும் கண்டனம்!
vanathi BJP MLA Condemn to RahulGandhi
காங்கிரஸ் மத்தியில் ஆட்சிக்கு வந்தால், சமுதாயத்தில் பின்தங்கியுள்ள மக்களுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டை ரத்து செய்வோம் என்று கூறிய ராகுல்காந்திக்கு, பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், “வறுமை” என்பதை அனுபவித்துப் பழகாத பிறவிப் பணக்காரரான உங்களுக்கு, சமூக ரீதியாக பின்தங்கிய மக்களின் வரப்பிரசாதமாக திகழும் இடஒதுக்கீட்டைப் பற்றி என்ன தெரியும் ராகுல்கந்தி அவர்களே?
சமுதாயத்தில் பின்தங்கியுள்ள மக்களின் கல்வி, வேலைவாய்ப்புகள் மற்றும் பல்வேறு துறைகளில் அவர்களின் பங்களிப்பை உறுதி செய்யும் இட ஒதுக்கீட்டை ரத்து செய்யுமளவிற்கு அம்மக்களின் மீது உங்களுக்கு என்ன காழ்ப்புணர்ச்சி?
தேர்தல் நேரத்தில், பாஜக இடஒதுக்கீட்டைப் பறிக்க நினைப்பதாகவும், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இடஒதுக்கீடு உயர்த்தப்படும் என்றும் கூறி வந்த நீங்கள், தேர்தலில் தோல்வியடைந்த பின் “இடஒதுக்கீட்டை ரத்து செய்யவேண்டும்” என்று கூறுவது உங்களைத் தேர்ந்தெடுக்காத மக்களை பழிவாங்குவதற்கா?
உங்கள் கொள்ளுத் தாத்தாவோ எனக்கு இடஒதுக்கீடே பிடிக்காது என்றார், உங்கள் பாட்டியோ சமூக மற்றும் கல்வியியலில் பின்தங்கிய வகுப்பினரை அடையாளம் காணும் முனைப்பில் கொண்டு வரப்பட்ட “மண்டல் கமிஷனின்” பரிந்துரைகளை அமல்படுத்த மறுத்தார், உங்கள் அப்பாவோ அந்த கமிஷனின் பரிந்துரைகளை எதிர்த்தார், ஆனால் நீங்கள் அதற்கும் ஒரு படி மேலே சென்று பல ஆண்டுகள் போராடி பெறப்பட்ட இடஒதுக்கீட்டை ரத்து செய்ய துடிக்கிறீர்கள். இடஒதுக்கீட்டால் பயன்பெறும் சாமானிய மக்கள் மீது உங்கள் பணக்கார பரம்பரைக்கே அப்படி என்ன கோபம்?
எனவே, உங்கள் அரசியல் லாபத்திற்காகவும் காழ்ப்புணர்ச்சிக்காகவும், பின்தங்கிய மக்களின் உரிமைகளைப் பறிக்க நீங்கள் எவ்வளவு தான் முயற்சித்தாலும், பாஜக எனும் மாபெரும் மக்கள் சக்தி இருக்கும் வரை உங்கள் பகல் கனவு பலிக்காது" என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
English Summary
vanathi BJP MLA Condemn to RahulGandhi