வேங்கைவயல் விவகாரம்: தூண்டியவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் - தமிழர் தேசம் கட்சி! - Seithipunal
Seithipunal


வேங்கைவயல் விவகாரத்தில் உண்மை வெட்ட வெளிச்சத்திற்கு வந்து உள்ளதாகவும், இதில், தூண்டியவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சிபிஐ விசாரணை தேவை என்றும் தமிழர் தேசம் கட்சி தலைவர் கே.கே.செல்வகுமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் அறிக்கையில், "கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் பட்டியல் சமூக மக்கள் வசிக்கும் பகுதியிலுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலந்துவிட்டதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வெள்ளனூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

அடுத்த நாள் (27 ஜனவரி 2022) அப்பகுதியில் அன்றைய மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு மேற்கொண்ட போது, அங்குள்ள தேநீர் கடையில் இரட்டை குவளை முறை நடைமுறையில் இருப்பதாகவும், இறையூர் கோவிலுக்குள் பட்டியல் சமூக மக்கள் அனுமதிக்கப் படுவதில்லை எனவும் புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில் தேநீர் கடைக்காரர் மற்றும் சாமியாடிய பெண் மீது வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில்தான் வேங்கைவயல் விவகாரம் சாதிய தீண்டாமை காரணமாகவே பட்டியல் சமுதாய மக்கள் வசிக்கும் பகுதியிலுள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்டதாக தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையிலான 11 பேர் கொண்ட குழு இவ்வழக்கை விசாரித்து வந்தநிலையில் பல்வேறு அரசியல் அழுத்தத்தின் காரணமாக காவல்துறையின் விசாரணையில் நம்பகத்தன்மை இல்லை என்று வழக்கு 2023 ஜனவரி 14ஆம் தேதியில் குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு துறையிடம்(சிபிசிஐடி) ஒப்படைக்கப்பட்டது.

அதன் பிறகு 737 நாட்களாக 397 சாட்சிகளிடம் விசாரணை செய்து, சுமார் 196 அலைபேசி எண்கள் மற்றும் 1 இலட்சத்துக்கும் மேற்பட்ட அலைபேசி எண்களை உள்ளடக்கிய 87 கோபுர தகவல்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டு, 5 நபர்களிடம் குரல் பரிசோதனை, 31 நபர்களிடம் டி.என்.ஏ பரிசோதனை என தொழில்நுட்ப ரீதியாகவும்,

அறிவியல் பூர்வமாகவும் விசாரணை மேற்கொண்டு வீடியோ ஆதாரங்கள், தடயவியல் அறிக்கை, மருத்துவ அறிக்கைகள், புலனாய்வு அதிகாரியால் செய்யப்பட்ட செயல்முறை விளக்கங்களின் முடிவுகள், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் அறிக்கை, வல்லுநர்களின் கருத்துகள் மற்றும் சாட்சிகளின் அறிக்கைகள் ஆகியவற்றை பகுப்பாய்வு செய்த பின்னர் புலன் விசாரணை முடிக்கப்பட்டு மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் மலம் கலந்ததாக பொய்யான தகவல் பரப்பியது முரளிராஜா எனவும் அதனை உண்மையாக்கிட மலத்தினை கலந்தது முத்துகிருஷ்ணன் மற்றும் சுதர்சன் எனவும்,

 முட்டுக்காடு ஊராட்சி மன்ற தலைவர் பத்மா அவர்களின் கணவர் முத்தையா அவர்களை பழி வாங்கவே இச்செயலில் ஈடுபட்டுள்ளார்கள் எனவும் புதுக்கோட்டை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் சிபிசிஐடி குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. இந்நிலையில் பல்வேறு அரசியல் கட்சியினர்கள் சிபிசிஐடி போலீசாரின் விசாரணையில் நம்பகத்தன்மை இல்லை எனவும் பாதிக்கப்பட்ட தரப்பினர் மீது வழக்கு பதிந்துள்ளதாகவும் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி அமைக்க வேண்டும் எனவும் பேசி வருகின்றனர்.

இவ்வழக்கில் ஆரம்பம் முதலே இம்மூவரும் காவல்துறையினரால் சந்தேகிக்கப்பட்டு வந்தவர்கள்தான். வழக்கின் ஆரம்ப காலகட்டத்திலேயே காவல்துறைக்கு போதிய அவகாசம் அளித்திருந்தாலே வழக்கை முறையாக முடித்து இருப்பார்கள். இவ்வளவு காலதாமதம் ஏற்பட்டிருக்காது.

பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்கள்தான் பட்டியல் சமுதாயத்திற்கு எதிராக இந்த குற்றத்தை செய்துள்ளனர் என்று முடிவு செய்துகொண்டு பேசுபவர்கள் மத்திய புலனாய்வு துறையே(சிபிஐ) விசாரித்தாலும் அதனையும் சந்தேகிப்பார்கள்.

மேலும் வழக்கு பதியப்பட்டுள்ள நபர்கள் யாரும் மலம் கலந்த நீரை குடித்து பாதிக்கப்பட்டவர்கள் கிடையாது. அவர்களின் உறவினர்கள் சிலரே பாதிக்கப்பட்டவர்கள். இரு சமூகங்களுக்கு இடையே சாதிய மோதலை ஏற்படுத்த வேண்டும் என்ற குறுகிய எண்ணம் கொண்ட இவர்களைப் போன்றவர்கள் உறவினர்கள் பாதிக்கப்படுகிறார்களே என்றெல்லாம் கவலை கொள்ள மாட்டார்கள். திட்டத்தை நிறைவேற்றுவதற்காக எதற்கும் துணிந்தவர்களாகவே இருப்பார்கள்.

சி498, தந்தை பெரியார் சாலை, தீரன் நகர், திருச்சி-620009 முட்டுக்காடு ஊராட்சி தலைவரின் கணவர், ஒன்றிய குழு உறுப்பினர் இருவரும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர்கள். ஒன்றிய குழு உறுப்பினர் சிதம்பரத்தின் சாதி மேலாதிக்க போக்கின் காரணமாக இருவருக்கும் இடையேயான அதிகார மோதலை பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின மக்களுக்கு இடையான மோதலாக மாற்றி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் முட்டுக்காடு ஊராட்சி மன்ற தலைவரின் கணவரை பழிவாங்க வேண்டும் என்ற நோக்கில் பட்டியலின இளைஞர்களை இக்குற்ற செயலுக்கு தூண்டியுள்ளார் ஒன்றிய குழு உறுப்பினர் சிதம்பரம்.

சிபிசிஐடி போலீஸார் இந்த வழக்கில் தூண்டுதலாக இருந்த ஒன்றிய குழு உறுப்பினர் சிதம்பரத்தையும் சேர்த்து இக்கொடும் குற்றத்தை புரிந்தவர்களுக்கு உரிய தண்டனையை விரைவாக பெற்று தர வேண்டும் என்று தமிழர் தேசம் கட்சி வலியுறுத்துகிறது. மேலும் தொழில் நுட்பங்களை பயன்படுத்தி அறிவியல் பூர்வமான விசாரணையை மேற்கொண்டு குற்றவாளிகளை உறுதி செய்த சிபிசிஐடி போலீசாரை தமிழர் தேசம் கட்சி பாராட்டுகிறது" என்று கே.கே.செல்வகுமார் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Vengaivayal issue Tamilar desam katchi


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->