வேட்பாளர்களின் பின்னணி பற்றி வாக்காளர்களுக்கு தெரிவிக்க வேண்டும் - தலைமை தேர்தல் ஆணையர்.!
Voters should be informed about the background of the candidates
வேட்பாளர்களின் குற்றப் பின்னனி மற்றும் அவரை தேர்வு செய்ததற்கான காரணங்களை ஊடகங்கள் வாயிலாக அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா கூறியுள்ளார்.
கோவா மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் பிப்ரவரி மாதத்துடன் முடிவடைகிறது. இதனையடுத்து அங்கு தேர்தல் நடத்துவது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ள தலைமைத் தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா தலைமையில் 13 பேர் கொண்ட குழுவினர் ஏற்கனவே கோவா வந்திருந்தனர்.
இந்நிலையில் இக்குழு கோவாவில் தேர்தல் நடத்துவது தொடர்பான ஆலோசனையின் முதல் நாளான நேற்று, மாநில தலைமை தேர்தல் அதிகாரி, காவல்துறை அதிகாரிகள், அமலாக்கத் துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இதில் தேர்தலை சுமூகமாக நடத்துவதற்கு தேவையான முன்னேற்பாடுகளை செய்வது குறித்தும் மாவட்ட வாரியாக கள நிலவரங்கள் குறித்தும் இந்திய தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா கேட்டறிந்தார்.
தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்று, மாநில தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், மாநில டிஜிபி உள்ளிட்ட மூத்த அரசு அதிகாரிகள் உடன் ஒரு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் மாநிலத்தில் தேர்தலுக்காக முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா,
மாநில எல்லைகள், கடற்பகுதிகள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், வங்கிகளில் பணப்பரிவர்த்தனையை கண்காணிக்கும்படியும், சந்தேகத்திற்கிடமான வகையில் பணப் பரிமாற்றம் நடைபெற்றால் அது குறித்து தகவல் தெரிவிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர், வேட்பாளர்களின் தகுதி மற்றும் பின்னனி தகவல்களை வாக்காளர்களிடம் தெரிவிக்கும்படி அரசியல் கட்சிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் சுஷில் சந்திரா தெரிவித்தார்.
English Summary
Voters should be informed about the background of the candidates