இளைஞரணி மாநாட்டால் "சரிந்த திமுக".! வெகுண்டெழுந்த "இரட்டை இலை".!! வரலாற்றை மாற்றுவாரா உதயநிதி.? - Seithipunal
Seithipunal


சேலத்தில் வரும் டிசம்பர் 17ஆம் தேதி திமுக இளைஞரணியின் 2வது மாநில மாநாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருப்பது திமுகவின் தோல்வி வரலாற்றை உதயநிதி மாற்றுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

திராவிட முன்னேற்ற கழகதின் இளைஞர் அணி ஆரம்பித்து 27 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 2007 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் முதல் முறையாக இளைஞரணி மாநாடு நெல்லையில் நடைபெற்றது. நெல்லை மருத்துவ கல்லூரி மைதானத்தில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டு சுமார் 10 கோடி ரூபாய் செலவில் திமுக தனது முதல் இளைஞரணி மாநாட்டினை நடத்தியது. 

அந்த காலகட்டத்தில் தமிழகத்தில் கூட்டணி கட்சிகளின் தயவோடு மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி தலைமையில் திமுக ஆட்சி நடைபெற்ற சூழலில் மத்தியிலும் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் திமுக அங்கம் வகித்திருந்தது.

அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதியின் ஆட்சி காலத்தில் தமிழகத்தில் காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு என தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் பிரச்சினைகள் தலை தூக்கி இருந்தன. அதேபோன்று சட்டம் ஓழுங்கு, மின்வெட்டு, விலைவாசி உயர்வு என பொதுமக்களை பாதிக்கும் பிரச்னைகளும் அதிகரித்து காணப்பட்டது.

மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி அதிகாரத்தில் இருந்த ஆளுங்கட்சியான திமுக பொதுமக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் திமுகவை வளர்த்தெடுக்க முக்கியத்துவம் கொடுத்து முதல் இளைஞரணி மாநாட்டினை அறிவித்தது. தமிழகம் முழுவதிலிருந்தும் லட்சக்கணக்கான தொண்டர்கள் நெல்லையில் குவிந்தனர். மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்ற திமுக மாநாட்டிற்கு வந்த தொண்டர்களிடமிருந்து நுழைவு கட்டணமாக ரூ. 40,18,422 வசூல் செய்ததாக அப்போதைய திமுக தலைவர் கருணாநிதியே அறிவித்தார்.

இந்த நிலையில் தான் அடுத்த 2 ஆண்டுகளில் 2009ம் ஆண்டிற்கான நாடாளுமன்ற பொது தேர்தல் நடைபெற்றது. 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் திமுக தமிழகத்தில் 39 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த நிலையில் 2009ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் 27 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. 

திமுகவுக்கு எதிராக அதிமுக மேற்கொண்ட தேர்தல் பிரச்சாரத்தால் 2004ல் ஒரு நாடாளுமன்ற தொகுதிகளில் கூட வெற்றி பெறாத அதிமுக 2009ல் நாடாளுமன்ற 12 தொகுதிகளை கைப்பற்றியது. இதற்கு காரணம் திமுக ஆட்சியில் நடைபெற்ற ஊழல், மக்கள் பிரச்சனையை கையில் எடுத்து அதிமுக மேற்கொண்ட போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும், தேர்தல் பிரச்சாரமும் தான்.

அதன் பிறகு 2011ம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 203 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதில் அதிமுக மட்டும் 160 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி பிடித்தது. அதிமுக கூட்டணியில் இடம் பிடித்திருந்தால் தேமுதிக 29 தொகுதிகளில் வெற்றி பெற்ற எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது.

திமுக தலைமையிலான கூட்டணி வெறும் 31 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. அதிலும் குறிப்பாக திமுக போட்டியிட்ட 119 தொகுதிகளில் 23 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை இழந்தது. திமுக வரலாற்றில் எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பெற முடியாத தேர்தலாக 2011 ஆம் ஆண்டு தேர்தல் அமைந்தது.

அதனை தொடர்ந்து நடைபெற்ற 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலும் அதிமுக தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் கன்னியாகுமரி மற்றும் தர்மபுரி நாடாளுமன்ற தொகுதிகளை தவிர மற்ற அனைத்து தொகுதிகளிலும் அதிமுகவின் இரட்டை இலை சின்னம் வெகுண்டு எழுந்து வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் திமுக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாமல் மண்ணை கவியது. 

அதன் பிறகு நடைபெற்ற 2016 ஆம் ஆண்டு சட்டமன்ற பொது தேர்தலில் அதிமுகவில் அங்கம் வகித்த தேமுதிக, தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணியில் அங்கம் வகித்த மதிமுக, சிபிஎம், சிபிஐ, விசிக இணைந்து மக்கள் நல கூட்டணி என்ற பெயரில் மூன்றாவது அணியை அமைத்தன. 

இந்த தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட அதிமுக 134 தொகுதிகளை கைப்பற்றி மீண்டும் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. திமுக 173 தொகுதிகளில் போட்டியிட்டு 89 தொகுதிகள் மட்டுமே வெற்றி பெற்று மீண்டும் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது. இருப்பினும் திமுகவால் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை. அதன் பிறகு தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களை தொடர்ந்து தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கடந்த 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற திமுக இளைஞரணி மாநாட்டிற்கு பிறகு நடைபெற்ற அனைத்து தேர்தலிலும் தொடர் திமுக தோல்வியை சந்தித்த திமுக கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலிலும், 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலிலும் கூட்டணி கட்சிகளின் பலத்தோடு தனது வெற்றி பயணத்தை மீண்டும் தொடங்கியுள்ளது.

இந்த நிலையில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக தனது 2வது இளைஞரணி மாநாட்டினை அறிவித்துள்ளது. வரும் டிசம்பர்17ஆம் தேதி திமுக இளைஞரணியின் 2வது மாநில மாநாடு சேலத்தில் நடைபெறும் என திமுக அறிவித்துள்ளது. சமீபத்தில் அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு மதுரையில் நடைபெற்ற அதிமுகவின் மாநில மாநாடு வெற்றிகரமாக முடிந்த நிலையில் தற்பொழுது திமுக இளைஞரணி மாநாடு அறிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கு காரணம் தற்போது தமிழகத்தில் நிலவி வரும் சட்டம் ஒழுங்கு, அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டு, வரி உயர்வு, விலைவாசி உயர்வு, மின் கட்டண உயர்வு போன்ற மக்கள் பிரச்சனைகள் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களை வெகுவாக பாதித்துள்ளது.

தற்போதைய முதல்வர் மு.க ஸ்டாலின் திமுகவின் இளைஞரணி செயலாளராக இருந்தபோது கடந்த 2007 ஆம் ஆண்டு நெல்லையில் நடைபெற்ற திமுக இளைஞரணி மாநில மாநாட்டிற்கு பிறகு தோல்வி முகத்தை கண்ட திமுகவின் வரலாற்றை சேலத்தில் நடைபெறும் 2வது திமுக இளைஞரணி மாநில மாநாட்டின் மூலம் திமுகவின் அடுத்த வாரிசாக கருதப்படும் தற்போதைய திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மாற்றுவாரா? என்ற கேள்வி திமுகவினர் மத்தியில் எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Will Udayanidhi change DMK history in youth wing conference


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->