அலகு எவ்வாறு குத்தப்படுகிறது... அதன் வகைகள் என்ன?
How to Alagu kuthuthal
இன்றைய காலக்கட்டத்திலும் கடவுள் நம்பிக்கை என்பது அதிகரித்துக் கொண்டே வருகிறது.
அலகு குத்தும் பழக்கம் அனைத்து கோவில்களிலும் கிடையாது. குறிப்பாக கிராம காவல் தெய்வங்களான காளியம்மன், மாரியம்மன், எல்லையம்மன், திரௌபதி அம்மன், எக்கலாதேவி அம்மன், முனியாண்டி, கரடிப்பேச்சி மற்றும் முருகன் கோவில்களில் தான் அதிகமாக இருக்கிறது.
வருடத்திற்கு ஒருமுறை கொண்டாடப்படும் கிராம காவல் தெய்வங்களின் விழாக்களின்போது தான் பக்தர்கள் இந்த அலகு குத்துதலை செய்து வருகின்றனர். இந்த அலகு குத்தும் விழா ஒரு நாளில் வேண்டிக் கொண்டு மறு நாளில் வேண்டுதலை நிறைவேற்றுகின்ற விழா இல்லை.
திருவிழா ஆரம்பித்ததில் இருந்து ஆண்களும், பெண்களும் தங்களின் வேண்டுதலை மனதுக்குள் வேண்டி பின் மறு வருடம் கோவில் திருவிழா நடைபெறும் பொழுது தங்களின் வேண்டுதலை நிறைவேற்றுகின்றனர்.
எவ்வாறு அலகு குத்தப்படுகிறது?
தமிழ் கோவில் திருவிழாக்களில் பால் குடம், காவடி எடுப்போர் தெய்வ வேண்டுதலுக்காக தம் வாயிலும், உடலிலும் கூரியக் கம்பியைக் குத்திக் கொள்வதே அலகு குத்துதல் எனப்படும். இந்த அலகு குத்துதல் என்பது காவடி, பால் குடம் எடுப்பதற்கு முன் பூஜை செய்து, தீபாரதனை காட்டிய பின் நடைபெறும்.
பக்தரின் வாயில் ஒரு கன்னத்திலிருந்து, மற்றொரு கன்னத்தை நோக்கி அலகை குத்தி விடுவார்கள். இதன் ஒரு முனை திரிசூலம் அல்லது வேல் போல் இருக்கும்.
சில நேரங்களில் நாக்கை வெளியே எடுத்து மேலிருந்து கீழ் நோக்கிக் குத்துவதுமுண்டு. கூர் கம்பிகளை உடலின் மேல் தோலில் சொருகிக் கொள்வதுமுண்டு. இவையே அலகு குத்துதல் எனப்படுகிறது. குண்டூசி, கோணி ஊசி, சிறுவேல், நீண்டவேல் என்று உடலில், முதுகில், கன்னத்தில் குத்திக் கொள்கின்றனர்.
காது குத்துதல், மூக்குக் குத்துதல் எப்படியோ, அப்படித்தான் இது. குத்தும்போது மட்டும் வலிக்கும். அதன்பின் வலிக்காது. 12 அடி நீளமுள்ள அலகு குத்துகிறவர்களுக்கும், முதுகில் கொக்கிமாட்டித் தேர் இழுக்கிறவர்களுக்கும் வலிக்காதா என்று கேட்டால் எல்லாவற்றிலும் குத்தும்போது மட்டுமே வலிக்கும். அதன்பின் வலிக்காது என்பதே காரணம் ஆகும்.
அலகு குத்துதலின் வகைகள் :
நாக்கு அலகு
முதுகு அலகு
காவடி அலகு
வாயலகு
வயிற்று அலகு
அலகு நடனம்