ஓடும் ரெயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை..அறிக்கை தாக்கல் செய்ய தமிழக டி.ஜி.பி.க்கு உத்தரவு!
Pregnant woman molested on moving train Tamil Nadu DGP ordered to submit report
ஓடும் ரெயிலில் கர்ப்பிணிக்கு மர்ம நபர்கள் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது.மேலும் இந்தவிவகாரத்தில் விரிவான அறிக்கையை 3 நாட்களுக்குள் தேசிய மகளிர் ஆணையத்தில் சமர்ப்பிக்குமாறு தமிழக டி.ஜி.பி.க்கு உத்தரவிட்டு உள்ளது.
திருப்பூரில் உள்ள தனியார் பனியன் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்,ஆந்திர மாநிலத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர். 4 மாத கர்ப்பிணியான அவர், மருத்துவ பரிசோதனைக்காக ஆந்திர மாநிலத்திற்கு செல்வதற்காக நேற்று கோயம்புத்துாரில் இருந்து ஜோலார்பேட்டை வழியாக திருப்பதி வரை செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலில் பொது பெட்டியில் பயணம் செய்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து ரெயில் வேலூர் மாவட்டம் குடியாத்தம்- கே.வி.குப்பம் ரெயில் நிலையங்களுக்கு இடையே சென்று கொண்டிருந்த போது இளம் பெண் கழிவறைக்கு சென்றார். அப்போது அங்கு போதையில் இருந்த சிலர் இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர் என தெரிகிறது. அப்போது இளம் பெண்ணின் கூச்சல் சத்தம் கேட்டு சக பயணிகள் வருவதற்குள் போதை நபர்கள் இளம்பெண்ணை ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டு, எதுவும் தெரியாதது போன்று அவர்கள் வேறொரு பொது பெட்டிக்கு சென்று தப்பி சென்றனர்.
அதன் பின்னர் தண்டவாளத்தின் அருகே படுகாயத்துடன் இருந்த இளம் பெண்ணை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் வேலுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருக்கிறது. மேலும் இது குறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து மர்ம நபர்களை பிடிக்க ரெயில் நிலையத்தில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர்.
இந்தநிலையில் அப்பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட நபர் வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் அடுத்த பூஞ்சோலை கிராமத்தைச் சேர்ந்த ஹேமராஜ் (30) என்பதும், இவர் கடந்த 2022-ம் ஆண்டு ஓடும் ரெயிலில் பெண் பயணியிடம் செல்போன் பறிப்பு வழக்கிலும், கடந்த 2024-ம் ஆண்டு சென்னையைச் சேர்ந்த 29 வயது இளம்பெண் கொலை வழக்கிலும் கைது செய்யப்பட்டு 2 முறை குண்டர் தடுப்புச்சட்டத்தில் அடைக்கப்பட்டு சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்திருப்பதும் தெரியவந்தது.
இதைதொடர்ந்து, ஜோலார்பேட்டை ரெயில்வே காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து ஹேமராஜை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், தேசிய மகளிர் ஆணையம் இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு ஏற்று நடந்த சம்பவத்தை கண்டிப்பதாக தெரிவித்துள்ளது , மேலும் மாநிலத்தில் பெண்களின் பாதுகாப்பு கவலைகளை எழுப்புவதாகவும் தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்யவும், பாரதிய நியாய சட்டவிதிகளை அதற்கு பயன்படுத்தவும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கவும் வலியுறுத்தி உள்ளது.
மேலும், சம்பவத்தின் முதல் தகவல் அறிக்கை நகல் உள்ளிட்ட விரிவான அறிக்கையை 3 நாட்களுக்குள் தேசிய மகளிர் ஆணையத்தில் சமர்ப்பிக்குமாறு தமிழக டி.ஜி.பி.க்கு உத்தரவிட்டு உள்ளது.
English Summary
Pregnant woman molested on moving train Tamil Nadu DGP ordered to submit report