பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவில் கும்பாபிஷேகம்..லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!
Kumbabhishekam of the famous Masaniamman temple Lakhs of devotees participate
பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவில் கும்பாபிஷேகம் வெகுவிமரிசியாக நடைபெற்றது. கும்பாபிஷேக நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, மற்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு இருந்தனர்.
கோவை மாவட்டம் ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடைசியாக கடந்த 2010 டிசம்பர் 12-ந் தேதி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. கும்பாபிஷேகம் முடிந்து 14 ஆண்டுகள் ஆனதைத்தொடர்ந்து மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி கோவிலில் கடந்த சில மாதங்களாக திருப்பணிகள் நடந்தன. திருப்பணிகள் நிறைவு பெற்றதையடுத்து கடந்த 6-ந் தேதி விக்னேஷ்வர பூஜையும் கும்பாபிஷேக விழா தொடங்கியது.
தொடர்ந்து பிரமாண்டமாக அமைக்கப்பட்ட யாகசாலை மண்டபத்தில் யாக பூஜைகளும் தொடங்கி நடந்து வந்தது. கோபுரம் மற்றும் விமானங்களில் பொருத்துவதற்காக 52 புதிய கும்பங்கள் தயார் செய்யப்பட்டு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு பூஜைகள் நடந்தன.
விழாவின் சிகர நிகழ்ச்சியாக கும்பாபிஷேகம் இன்று காலை நடந்தது. காலை 7.35 மணிக்கு 6-ம் கால யாக பூஜையும், 8.45 மணிக்கு பூர்ணாகுதி பூஜையும் நடந்தது. தொடர்ந்து 9.15 மணிக்கு மாசாணியம்மன் கோவில் விமானம், ராஜகோபுரம் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
விமானம் மற்றும் ராஜகோபுரங்களுக்கு கோவில் அர்ச்சகர்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.
கும்பாபிஷேகத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு இருந்தனர். கும்பாபிஷேகம் நடந்தபோது அம்மா தாயே மாசாணி என பக்தி கோஷம் எழுப்பி வழிபட்டனர். பக்தர்கள் மீது டிரோன்கள் மூலம் புனித நீர் தெளிக்கப்பட்டது.
கும்பாபிஷேக நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார்பாடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கும்பாபிஷேகத்தை காண இன்று அதிகாலை முதலே பக்தர்கள் கோவிலில் குவியத் தொடங்கினர். அவர்களுக்கு தேவையான சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன.பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.
ஆனைமலையில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது. பக்தர்கள் வசதிக்காக 14 இடங்களில் வாகன நிறுத்துமிடங்கள் ஏற்படுத்தப்பட்டு இருந்தது.
English Summary
Kumbabhishekam of the famous Masaniamman temple Lakhs of devotees participate