நாளை சோமவார பிரதோஷம்... மன நிம்மதியும், மகிழ்ச்சியும் உண்டாக ஈசனை வழிபடுங்கள்...!!
Somavaram pradhosham in masi
சோமவார பிரதோஷம்:
சிவனுக்குரிய வழிபாடுகளில் சிவராத்திரியும், பிரதோஷமும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றன. பிரதோஷம் என்பது சைவ சமயத்தில் சிவபெருமானை வழிபட உகந்ததாகக் கருதப்படும் காலமாகும். இப்பிரதோஷ காலத்தில் நிகழும் வழிபாடு பிரதோஷ வழிபாடு எனவும், பிரதோஷ தினத்தில் கடைபிடிக்கப்படும் விரதம் பிரதோஷ விரதம் எனவும் அழைக்கப்படுகின்றது. அந்த வகையில் நாளை திங்கட்கிழமை (14.02.2022) மாசி 2ஆம் தேதி பிரதோஷம் வருகிறது.
பிரதோஷத்தில் சோமவாரம் (திங்கள்) மிகவும் சிறப்பு வாய்ந்தது. சிவபெருமானுக்கு உகந்த நாள், சோமவாரம் ஆகும். திங்கட்கிழமையைத் தான் சோமவாரம் என்று அழைப்பார்கள். சோம என்றால் பார்வதியுடன் கூடிய சிவபெருமான் என்றும், சந்திரன் என்றும் பொருள்படும். கொடிய நோயால் பாதிக்கப்பட்ட சந்திரன், தன் நோய் குணமாக வேண்டி சிவபெருமானை நினைத்து தவமிருந்தார்.
சந்திரனின் தவத்தால் மகிழ்ந்த சிவபெருமான், சந்திரனின் நோயை நீக்கியதுடன், நவகிரகங்களில் ஒருவராக திகழும் வாய்ப்பையும் வழங்கினார். அப்போது சந்திரன், தனது வாரத்தில், மக்கள் விரதமிருந்து வழிபட்டால் தாங்கள் நல்ல பலனை வழங்க வேண்டும் என்று பரமேஸ்வரனை வேண்டிக்கொண்டார். அதன்படி தோன்றியதே சோமவார விரதமாகும்.
மேலும், இந்த பிரதோஷ நாளில் சந்திர திசை நடப்பவர்களும், சந்திரனை லக்னாதிபதியாக கொண்டவர்களும் கோவிலிற்கு சென்று பிரதோஷ வழிபாட்டில் கலந்து கொண்டால் மன நிம்மதியும், மகிழ்ச்சியும் உண்டாகும்.
பிரதோஷ வேளை என்று சொல்லப்படும் மாலை 4.30 முதல் 6 மணி வரையிலான அந்த நேரத்தில் சிவபெருமானுக்கும், நந்திதேவருக்கும் விசேஷ அபிஷேகங்கள், சிறப்பு பூஜைகள், அற்புதமான ஆராதனைகள் நடைபெறும். இந்த வழிபாட்டில் கலந்து கொண்டால் மனதில் உள்ள குழப்பங்கள் நீங்கி மன அமைதி கிடைக்கும். நல்ல எண்ணங்கள் மேலோங்கும்.
சோமவார பிரதோஷ தினத்தன்று சிவன் கோவில்களில் அர்ச்சனைக்கு வில்வம் அளித்தும், நந்திதேவருக்கு செவ்வரளியும், அருகம்புல் மாலையும் வழங்கி வழிபட்டால் நீங்கள் நினைத்தது நிறைவேறும்.
எலுமிச்சை சாதமோ, தயிர் சாதமோ, சர்க்கரைப் பொங்கலோ, வெண்பொங்கலோ இறைவனுக்கு நைவேத்தியம் செய்து, பக்தர்களுக்கு வழங்கினால் வாழ்க்கை வளமாகும்.
English Summary
Somavaram pradhosham in masi