சிவலிங்க வடிவ துளை.. முனை காத்த பெருமாள்.. அருள்மிகு ரவீஸ்வரர் திருக்கோயில்.!
Today special Ravishwarar temple
இந்த கோயில் எங்கு உள்ளது?
சென்னை மாவட்டத்தில் உள்ள வியாசர்பாடி என்னும் ஊரில் அருள்மிகு ரவீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.
இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?
சென்னையிலிருந்து சுமார் 6 கி.மீ தொலைவில் வியாசர்பாடி என்னும் ஊர் உள்ளது. வியாசர்பாடியில் இருந்து நடந்து செல்லும் தொலைவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.
இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?
இக்கோயிலில் சிவன், கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார். இவரது சன்னதிக்கு எதிரில் வாசல் கிடையாது. தென்திசையில் உள்ள வாசல் வழியாக நுழைந்து தான் இவரை தரிசிக்க முடியும்.
சிவன் சன்னதிக்கு மேலேயுள்ள இந்திர விமானம், நடுவில் எவ்வித பிடிமானமும் இல்லாமல் கூடு போன்று அமைந்துள்ளது. சிவன் மூலஸ்தானத்திலிருந்து பார்த்தால், இந்த அமைப்பு அழகாக காட்சியளிக்கிறது.
சிவனுக்கு எதிரே உள்ள சுவரில், சிவலிங்கம் போன்ற அமைப்பில் துளை அமைத்துள்ளனர். இதற்கு நேரே நந்தி அமைந்துள்ளது.
தினமும் காலையில் சூரியனின் ஒளி, சிவலிங்க வடிவ துளையின் வழியாக, சுவாமியின் மீது விழுகிறது. தினமும் இங்கு சூரியனே, முதலில் சிவனுக்கு பூஜை செய்வதாக ஐதீகம். இதன் பின்பு தான் காலசந்தி பூஜை செய்கின்றனர்.
சிவன் சன்னதி முன்மண்டபத்தில் சூரியன் காட்சி தருகிறார்.
ஜாதகத்தில் சூரியன் தொடர்பான தோஷம் உள்ளவர்கள் சிவன் மற்றும் சூரியனுக்கு விசேஷ பூஜை செய்து வேண்டிக்கொள்கின்றனர்.
வேறென்ன சிறப்பு?
பதினெண் புராணங்களையும், வேதங்களையும் இயற்றிய வேதவியாசர் சிவன் சன்னதிக்கு பின்புற பிரகாரத்தில் சிறிய சன்னதியில் அருள்பாலிக்கிறார்.
வியாசர் சன்னதிக்கு அருகில் 'முனை காத்த பெருமாள்" சன்னதி அமைந்துள்ளது.
3 நிலை ராஜ கோபுரத்துடன் கூடிய இத்தலத்தில் சுந்தர விநாயகர் என்ற திருநாமத்தில் விநாயகர் அழைக்கப்படுகிறார்.
கோயிலுக்கு நேரே வெளியில், சூரியபகவான் உருவாக்கிய தீர்த்தம் இருக்கிறது. சிவன் சன்னதிக்கு பின்புறத்தில் வன்னி மரம் அமைந்துள்ளது.
பைரவர், நடராஜர் வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், ஐயப்பன், ஆஞ்சநேயர் ஆகியோர் இத்தலத்தில் தனிச்சன்னதிகளில் காட்சியளிக்கின்றனர்.
என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?
ஆனியில் 10 நாட்கள் பிரம்மோற்சவம், கந்தசஷ்டி, மகர சங்கராந்தி, மாசிமகம், பங்குனி உத்திரம் ஆகியவை இக்கோயிலில் மிக விமர்சையாக கொண்டாடப்படுகிறது.
எதற்கெல்லாம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?
திருமணத்தடை, குழந்தையின்மை, நாக தோஷம் ஆகியவை நீங்கவும், கல்வி மற்றும் கலைகளில் சிறந்து விளங்கவும் இக்கோயிலில் பிரார்த்தனை செய்கின்றனர்.
இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?
இக்கோயிலில் வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் சுவாமிக்கு விசேஷ அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.
English Summary
Today special Ravishwarar temple