நவராத்திரி கொண்டாட்டத்தில் தினமும் சுண்டல் நிவேதனம் ஏன்?
why sundal on navarathri
நவராத்திரி என்றவுடனேயே அனைவருக்கும் நினைவில் வருவது கொலுவும், சுண்டலும்தான். நவராத்திரியின் ஒன்பது நாட்களும் தினமும் சுண்டல் செய்து, அம்பிகைக்கு நிவேதனம் செய்வது சிறப்பை தரும்.
நவராத்திரி மூன்று இடங்களில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
முதலாவது அவரவர் இல்லத்தில் நவராத்திரியை கொண்டாடி வழிபடலாம்.
இரண்டாவது ஆலயங்களுக்கு சென்று அங்கே கொண்டாடப்படும் நவராத்திரி கொண்டாட்டத்தை தரிசித்து வழிபடலாம்.
மூன்றாவது நவராத்திரி கொலு வைத்திருப்பவர்களின் வீடுகளுக்கு சென்று நவராத்திரி கொண்டாட்டத்தை தரிசித்து வழிபடலாம்.
இந்த ஒன்பது நாள் நவராத்திரி கொண்டாட்டத்தில் சுண்டல் நைவேத்தியம், பாயச வகைகளும் செய்யப்படுகிறது. தினமும் ஒவ்வொரு விதமான சுண்டல், பாயாசம் படையலிடுவார்கள்.
அதுமட்டுமின்றி ஒவ்வொரு நாளும் அன்னைக்கு ஒவ்வொரு அலங்காரம் செய்யப்படுவதோடு, ஒவ்வொரு தானியங்களான நைவேத்தியம், பாயாச வகைகளும் செய்து படைக்கப்படுகிறது.
நவராத்திரி கொண்டாட்டத்தில் தினமும் சுண்டல் நிவேதனம் ஏன்?
சிவன், தேவர்களுக்கு அமிர்தம் கொடுத்து காத்தருளினார். அதேபோல் சிவனும், மகாவிஷ்ணுவும் பூமியில் உள்ள மக்கள் உயிர் வாழ்வதற்கு மழை எனும் அமிர்தத்தை தந்தருளினார்கள்.
மழையால் பூமி செழித்துக் கொழிக்க, தானியங்களும் செழித்து விளைந்தன. தானியங்கள் என்பவை சக்தியை போன்றது. இதில் சக்தி என்பது பெண் தெய்வத்தை குறிக்கிறது.
பெண் என்பவள் சக்தியை போன்றவள். எனவே, சக்தி எனும் பெண் தெய்வங்களுக்கு தானியங்களை கொண்ட சுண்டல், பாயாசம் முதலானவை நைவேத்தியமாக படைக்கப்பட்டு, உணவாக வழங்கப்படுகிறது. அந்த பிரசாதத்தை பெண்களுக்கு, அதாவது சக்திக்கு வழங்குகிறார்கள்.
புரட்டாசி மற்றும் ஐப்பசி மாதங்களில் அடைமழை பெய்யும். இதனால் தோல் நோய் முதலானவை ஏற்பட வாய்ப்புகள் உண்டு. இந்த நோய்களை போக்கும் சக்தி தானியங்களுக்கு உண்டு. ஆகவே, நவராத்திரி நாட்களில் சுண்டலாகவும், பாயாசமாகவும் தானியங்களை செய்து அனைவருக்கும் வழங்குவதை வழக்கமாக கொண்டிருந்தார்கள் முன்னோர்கள்.