திருவண்ணாமலையைத் தொடர்ந்து கிருஷ்ணகிரியில் உருண்டு விழுந்த பாறை - பொதுமக்கள் அதிர்ச்சி.!
rock fell down in krishnagiri
வங்கக் கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்துள்ளது. அதிலும் கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் கனமழை கொட்டியது. இதனால் ஊத்தங்கரையில் ஏரி நிரம்பி வழிந்து ஊருக்குள் தண்ணீர் புகுந்ததால் 50-க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஆற்றில் அடித்து செல்லப்பபட்டன.
மேலும், 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் துண்டிக்கப்பட்டது. இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று சாரல் மழை பெய்தது. தொடர் மழை காரணமாக கிருஷ்ணகிரி பழைய பேட்டையில் உள்ள கிருஷ்ணகிரி மலையில் இருந்து இன்று காலை திடீரென்று ராட்சத பாறை ஒன்று சரிந்து விழுந்தது.
இந்த பாறை அடிவாரத்தில் உள்ள மேல்தெருவில் வசித்து வருபவர் வெங்கடாசலம் என்பவர் வீட்டின் சுற்றுசுவர் மீது விழுந்தது. ஆனால், அதிர்ஷ்டவசமாக அந்த பாறை வெங்கடாசலத்தின் வீட்டின் பின்புறமுள்ள சுற்றுசுவர் மீதும், அந்த சுவரின் அருகில் இருந்த மற்றொரு பாறைமீது மோதி தடுத்து நின்றதால், வீட்டில் இருந்த வெங்கடாசலத்தின் மனைவி மற்றும் 2 குழந்தைகள் உயிர் தப்பினர்.
பாறை உருண்டு விழுந்தபோது பயங்கர சத்தம் கேட்டதால் வெங்கடாசலம் குடும்பத்தினர், அந்த பகுதியில் வசித்து வந்த பொதுமக்களும் வீட்டுகளை விட்டு வெளியேறி ஓடி வந்தனர். பின்னர் சம்பவம் குறித்து அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்ததன்பேரில் தாசில்தார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மலையில் இருந்து சரிந்து விழுந்த பாறையை பார்வையிட்டனர்.
தொடர்ந்து இந்த ராட்சத பாறையை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தனர். இதையடுத்து அடிவார பகுதிகளில் வசித்து வரும் பொதுமக்களையும், அவர்களது உடைமைகளையும் பத்திரமாக மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
சமீபத்தில் திருவண்ணாமலையில் பெய்த கனமழையால் மண்சரிவு ஏற்பட்டு வீடு புதைந்ததில் அங்கு வசித்து வந்த 7 பேரின் உடல்கள் நேற்று மீட்கப்பட்டுள்ள நிலையில் தற்போது கிருஷ்ணகிரியில் பாறை உருண்டு விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
rock fell down in krishnagiri