நடப்பு சாம்பியன் இங்கிலாந்து வெளியேறுகிறதா? சிக்கலில் சிக்க வைத்த ஸ்கட்லாந்து!
ICC T20 WC 2024 ENG
ஐசிசி டி20 உலக கோப்பை தொடரிலிருந்து ஓமன் அணி முதல் அணியாக வெளியேறி உள்ளது. நேற்று முன்தினம் குரூப் பி பிரிவில் லீக் ஆட்டத்தில் ஸ்காட்லாந்து - ஓமன் அணிகள் மோதின.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஓமன் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில், 7 விக்கெட் இழப்பிற்கு, 150 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஓமன் அணியின் அதிரடி ஆட்டக்காரர் பிரதிக் அதவாலே 2 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 54 ரன்கள் எடுத்தார்.
இதனை அடுத்து 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஸ்காட்லாந்த அணி ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடியது.
குறிப்பாக ஜார்ஜ் முன்சே 20 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 41 ரன்களும், பிரண்டன் மெக்முல்லன் 31 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 61 ரன்களும் எடுத்தனர்.
இறுதியில் 13.1 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை மட்டும் இழந்து, 153 ரன்கள் குவித்து அபார வெற்றியை ஸ்கட்லாந்து அணி பதிவு செய்தது.
இந்த வெற்றியின் மூலம் ஸ்காட்லாந்து அணி நிகர ரன்ரேட் 2.164 உடன் 5 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளது. மேலும், சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.
அதே சமயத்தில் இதேபிரிவில் உள்ள இங்கிலாந்து அணி தனது எஞ்சிய 2 ஆட்டங்களிலும் அதிக அளவிலான ரன் ரேட் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற நெருக்கடியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
மேலும், ஹாட்ரிக் தோல்வியைச் சந்தித்துள்ள ஓமன் அணி சூப்பர் 8 சுற்றுக்கான வாய்ப்பை இழந்து தொடரில் இருந்து முதல் அணியாக வெளியேறியுள்ளது.