பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பு நெறிமுறை தொடர்பில் முறையான ஆய்வு ; திமுகவை வலியுறுத்தும் எடப்பாடி பழனிசாமி..!
A proper inspection of the safety protocols in cracker factories Edappadi Palaniswami urges DMK
விருதுநகர் கோயில் புலிகுத்தி அருகே சின்னவாடி சத்திய பிரபு பட்டாசு ஆலை வெடி விபத்தில் பெண் ஒருவர் பலியானதோடு, 07 பேர் படுகாயம் அடைந்தனர். அத்துடன் குறித்த கட்டடங்கள் தரைமட்டமாகியுள்ளன.
இந்நிலையில், பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றப்படுவது தொடர்பில் தி.மு.க., அரசு முறையான ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று அ.தி.மு.க., பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
இது குறித்து அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது;
விருதுநகர் மாவட்டம் சின்னவாடியூர் பகுதியில் இயங்கிவரும் தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்ததாகவும்,7 பேர் படுகாயம் அடைந்ததாகவும் வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. உயிரிழந்தவரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.
விருதுநகர் மாவட்டத்தில் தொடர்கதையாகி வரும் பட்டாசு ஆலை விபத்துகள் குறித்து இந்த ஸ்டாலின் மாடல் திமுக அரசிடம் சுட்டிக்காட்டுவதை கண்டுகொள்ள மனமில்லாமல், தொடர்ந்து அலட்சியப் போக்குடன் செயல்பட்டு இத்தகைய விபத்துகளுக்கு காரணமாக அமைவது கடும் கண்டனத்திற்குரியது.
விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தாருக்கு உரிய இழப்பீடு வழங்குமாறும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளோர்க்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதிசெய்யுமாறும், இனியாவது பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பு நெறிமுறைகள் பின்பற்றப்படுவதை முறையான ஆய்வு மேற்கொள்ளுமாறும் அரசை வலியுறுத்துகிறேன்.
என்று அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.
English Summary
A proper inspection of the safety protocols in cracker factories Edappadi Palaniswami urges DMK