#INDvsAUS : முதல் ஒருநாள் போட்டி.. ராகுல் - ஜடேஜா தரமான பேட்டிங்.. இந்தியா அபார வெற்றி.!
India won by 5 wickets against australia in 1st oneday international
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றுள்ளது.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இதில், 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. அதனைத் தொடர்ந்து இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது.
இந்த நிலையில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் போட்டி இன்று மதியம் 1.30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ஹார்திக் பாண்டியா பௌலிங் தேர்வு செய்தார்.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடியது. இதன் மூலம் ஆஸ்திரேலியா அணி ஒரு கட்டத்தில் 22.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 139 குவிந்திருந்தது.
ஆஸ்திரேலியா அணி 300 ரன்களுக்கு மேல் குவிக்கும் என எதிர்பார்த்த நிலையில், இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சில் அடுத்தடுத்த விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இறுதியாக ஆஸ்திரேலியா அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 188 ரன்கள் எடுத்துள்ளது.
ஆஸ்திரேலியா அணியில் சிறப்பாக விளையாடிய மிட்செல் மார்ஷ் 65 பந்துகளில் 81 ரன்கள் குவித்தார். இந்திய அணியில் சிறப்பாக பந்து வீசிய முகமது ஷமி மற்றும் முகமது சிராஜ் தலா 3 விக்கெட்டுகளும், ஜடேஜா 2 விக்கெட்டுகளும், குல்தீப் யாதவ் மற்றும் ஹார்திக் பாண்டியா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
அதனைத் தொடர்ந்து 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி ஆரம்பம் முதலே அடுத்தடுத்த விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஒரு கட்டத்தில் 83 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில், 6வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கே.எல் ராகுல் - ஜடேஜா ஜோடி நிதானமாக விளையாடியது.
இதனையடுத்து இந்திய அணி 39.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இந்திய 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கடைசி வரை ஆட்டமிழக்காமல் விளையாடிய கே.எல். ராகுல் 75 ரன்களுடனும், ஜடேஜா 45 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
மேலும், இதன் மூலம் 3 போட்டிகள் ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது.
English Summary
India won by 5 wickets against australia in 1st oneday international