பிரசித் கிருஷ்ணா பந்து வீச்சில், மும்பையை பொட்டலம் கட்டிய குஜராத் அணி..!
IPL 2025 Gujarat beats Mumbai to register first win
18- வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 09-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து, களமிறங்கிய குஜராத் அணியின் தொடக்க வீரர்களாக சாய் சுதர்ஷன், கேப்டன் சுப்மன் கில் களமிறங்கி அதிரடியாக ஆடினர். இதில், 27 பந்துகளில் 38 ரன்கள் விளாசிய சுப்மன் கில் கேட்ச் மூலம் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ஜோஸ் பட்லருடன் ஜோடி சேர்ந்த சாய் சுதர்ஷன் தொடர்ந்து அதிரடியாக ஆடினார்.

தொடர்ந்து, 24 பந்துகளில் 39 ரன்கள் எடுத்த பட்லர் கேட்ச் மூலம் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ஷாருக்கான் 09 ரன்னில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய சாய் சுதர்ஷன் 41 பந்துகளில் 63 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
பின்னர் வந்த வீரர்கள் அடுத்தடுத்து தங்கள் விக்கெட்டுகளை இழந்து வெளியேறியா நிலையில், குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 08 விக்கெட்டுகள் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்தது. மும்பை அணி சார்பில் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 02 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து 197 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய மும்பை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி அளித்தது. முதல் ஓவரிலேயே தொடக்க வீரர் ரோகித் சர்மா 08 ரன்களில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான ரிக்கெல்டன் 06 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அடுத்தத்தக்க களமிறங்கிய திலக் வர்மா, சூர்யகுமார் ஜோடி பொறுப்பான ஆட்டத்தை கொடுத்தனர். அதில் திலக் வர்மா 36 பந்துகளில் 39 ரன்கள் எடுத்த கேட்ச் மூலம் அவுட் ஆனார். அடுத்ததாக வந்த ராபின் மின்ஸ் 03 ரன்னில்ஆட்டமிழந்து அதிர்ச்சி தந்தனர்.

அதிரடியாக ஆடிய சூர்யகுமார் 28 பந்துகளில் 48 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 11 ரன்னில் ஆட்டமிழந்தார். சாண்ட்னர், நமன் தலா 18 ரன்களுடன் களத்தில் இருந்தனர். இறுதியில் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 06 விக்கெட்டுகள் இழப்பிற்கு 160 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதன் மூலம் மும்பை அணியை 36 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் அணி அபார வெற்றி பெற்றது. சிறப்பாக பந்து வீசிய குஜராத் அணியின் பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். போட்டியின் ஆட்டநாயகனாக பிரசித் கிருஷ்ணா தெரிவு செய்யப்பட்டார்.
English Summary
IPL 2025 Gujarat beats Mumbai to register first win