மகளிர் டி20 உலகக்கோப்பை.. கடைசி வரை போராடிய இந்திய அணி.. இங்கிலாந்து வெற்றி.!
Womens T20 World Cup England won by 11 runs against India
மகளிர் டி20 உலகக்கோப்பையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 11 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி அடைந்துள்ளது.
8வது மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் பிப்ரவரி 10ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. அதன்படி மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இந்த டி20 உலக்கோப்பையில் மொத்தம் 23 போட்டிகள் நடைபெற உள்ளது.
அவை 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, நியூசிலாந்து, இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளது. அதேபோல் 'பி' பிரிவில் இந்தியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான், அயர்லாந்து அணிகள் இடம் பெற்றுள்ளன.
இதில், இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தானையும், 2வது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியையும் வீழ்த்தி 4 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. அதேபோல் 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள இங்கிலாந்து அணி 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.
இந்த நிலையில் இந்திய அணி தனது 3வது லீக் போட்டியில் இன்று இங்கிலாந்து அணியுடன் மோதியது. இந்திய நேரப்படி இன்று மாலை 6.30 மணிக்கு தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் பௌலிங் தேர்வு செய்தர்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இங்கிலாந்து மகளிர் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்தது. அதனைத் தொடர்ந்து 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதன் மூலம் இங்கிலாந்து அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு செல்வதை உறுதிப்படுத்தியுள்ளது. இந்திய அணி நாளை மறுநாள் (பிப்ரவரி 20ம் தேதி) கடைசி லீக் போட்டியில் அயர்லாந்து அணியுடன் மோதுகிறது.
English Summary
Womens T20 World Cup England won by 11 runs against India