2 வந்தே பாரத் ரெயில் சேவைகள்! இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!
2 Vande Bharat Rail Services Prime Minister Modi will start today
பிரதமர் நரேந்திர மோடி இன்று தமிழகத்தில் மேலும் 2 வந்தே பாரத் ரெயில் சேவைகளை தொடங்கி வைக்கிறார்.
தற்போது தமிழ்நாட்டில் மொத்தம் 5 வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், சென்னை எழும்பூர் - நாகர்கோவில் மற்றும் மதுரை - பெங்களூரு கண்டோன்மென்ட் இடையே புதிதாக வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட உள்ளன.
இன்று காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி இந்த புதிய வந்தே பாரத் ரெயில் சேவையை தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடு சென்னை சென்டிரலில் செய்யப்பட்டுள்ளது. சென்னை எழும்பூர் - நாகர்கோவில் வந்தே பாரத் ரெயில் சேவை புதன்கிழமை தவிர வாரத்தில் 6 நாட்கள் மற்றும் பெங்களூரு - மதுரை வந்தே பாரத் ரெயில் செவ்வாய்க்கிழமை தவிர வாரத்தில் 6 நாட்கள் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில், எழும்பூர் - நாகர்கோவில் இடையிலான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, கோவில்பட்டி, நெல்லை ஆகிய 7 இடங்களில் நின்று செல்ல இருக்கிறது. மொத்தம் 16 பெட்டிகள் கொண்டதாக இந்த ரெயில் இருக்கும். இதில் 1 எக்ஸிகியூடிவ் கிளாஸ், மீதமுள்ள பெட்டிகள் ஏ.சி. சேர் காராக இருக்கும்.
மேலும், சென்னை எழும்பூரில் காலை 5 மணிக்கு புறப்பட்டு மதியம் 1.50 மணியளவில் நாகர்கோவிலுக்கு புதிய வந்தே பாரத் ரெயிலானது சென்றடைய உள்ளது. பின்னர் நாகர்கோவிலில் இருந்து பிற்பகல் 2.20 மணிக்கு புறப்பட்டு இரவு 11.15 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும். ஆகையால் இந்த வந்தே பாரத் ரெயில் ஒரேநாளில் சென்று திரும்பும் வகையில் இயக்கப்பட உள்ளது.
இதேபோல, மதுரையில் இருந்து பெங்களூரு வரையில் இயக்கப்பட உள்ள புதிய வந்தே பாரத் ரெயிலானது மதுரையில் இருந்து காலை 5.15 மணிக்கு புறப்பட்டு மதியம் 1 மணிக்கு பெங்களூரு சென்றடையும். திண்டுக்கல், திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், கிருஷ்ணராஜபுரம் ஆகிய 6 நிலையங்களில் இந்த ரெயில் நின்று செல்லும். பின்னர் மதியம் 1.30 மணிக்கு புறப்பட்டு இரவு 9.54 மணிக்கு மதுரை வந்தடையும். இந்த ரெயில் 8 பெட்டிகள் கொண்டதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
2 Vande Bharat Rail Services Prime Minister Modi will start today