ஆங்கிலப் புத்தாண்டு | தலைவர்கள் வாழ்த்து!
2024 new Year Wish
ஆங்கிலப் புத்தாண்டு நாளை பிறக்க உள்ள நிலையில், தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் , சட்டமன்ற்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
முதல்வர் ஸ்டாலின் வாழ்த்துச் செய்தி : புதிய சிந்தனை, புதிய இலக்குகளுக்கான வாசலைத் திறந்து வைத்து நம்பிக்கையின் ஔிக்கதிர்களுடன் பிறக்கிறது இனிய புத்தாண்டு. வரும் புத்தாண்டில் புதிய சாதனை உச்சங்களைத் தொடும். அதற்கான நம்பிக்கையும் உறுதியும் புத்தாண்டில் நிறைந்துள்ளது.“எல்லார்க்கும் எல்லாம்” என்ற நமது லட்சியம் நிறைவேறும் நிறைவான ஆண்டாக இந்தப் புத்தாண்டு அமையட்டும்.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிசாமி வாழ்த்துச் செய்தி : மலருகின்ற புத்தாண்டில், மக்களுடைய துன்பங்கள் விலகி இன்பங்கள் பெருகவும்; அனைவரது வாழ்விலும் அன்பையும், மகிழ்ச்சியையும், நோய் இல்லாத வாழ்வையும், குறைவில்லாத செல்வத்தையும் வழங்கும் ஆண்டாக அமையவும், எல்லாம் வல்ல இறைவனை மனதார பிரார்த்தித்து, மக்கள் அனைவருக்கும் உளங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக்கொள்கிறேன்.
பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வாழ்த்துச் செய்தி : நாம் கடந்து வந்த கரடுமுரடான பாதைகள் முடிவுக்கு வந்து விட்டன. புத்தாண்டில் புதிய பாதை தெரியும்; புதிய வெளிச்சம் பிறக்கும். அவற்றின் உதவியுடன் 2024 ஆம் ஆண்டு நாம் எதிர்பார்த்ததைப் போலவே இனிப்பாக அமையும். அனைவருக்கும் அனைத்து நலன்களும், வளங்களும் கிடைக்கும்; பொருளாதாரம் வளரும்; மகிழ்ச்சி பெருகும்; அமைதியும், நிம்மதியும் கிடைக்கும்; அவற்றை சாதிக்க நாம் கடுமையாக உழைப்போம் என்று கூறி வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்துச் செய்தி : ஒழுக்கம் என்னும் மாளிகையைத் தாங்கி நிற்கும் தூண்களான அன்பு, அமைதி, எளிமை, சகோதரத்துவம், சமத்துவம் ஆகியவை வளரும் ஆண்டாக 2024 ஆம் ஆண்டு மலரட்டும். வலிமையான பாரதம், வளமான தமிழகம் உருவாக நாம் அனைவரும் ஒன்றுபட்டு உழைத்திட இந்தப் புத்தாண்டில் உறுதி ஏற்போம்.
பாமக தலைவர் டாக்டர் அன்புமணி இராமதாஸ் வாழ்த்துச் செய்தி: தமிழ்நாட்டின் வரலாற்றில் 2024 ஆம் ஆண்டு தவிர்க்க முடியாத ஆண்டாக அமையப்போவது நிச்சயம். அரசியல், சமூகநீதி, வாழ்வுரிமை உள்ளிட்ட பல துறைகளில் கடந்த ஆண்டுகளில் நிகழ்த்தப்பட்ட பல தவறுகள் புத்தாண்டில் திருத்தப்படும். தங்களின் நலனுக்காகவும், தங்களின் உரிமைகளுக்காகவும் உண்மையாக போராடக்கூடியவர்கள் யார்? என்பதை மக்கள் அறிந்து அங்கீகரிக்கும் ஆண்டாக அமையும்.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வாழ்த்துச் செய்தி : மலரும் புத்தாண்டு தமிழக மக்களுக்கு உயர்வான வாழ்க்கையையும், நீங்காத வளங்களையும், நிறைவான மகிழ்ச்சி மற்றும் மன உறுதியைத் தரும் ஆண்டாக அமையட்டும்.
மநீம தலைவர் நடிகர் கமல்ஹாசன் வாழ்த்துச் செய்தி : பிறக்கவிருக்கிறது புதிய ஆண்டு. அர்ப்பணிப்புணர்வுடன் தொடர்ச்சியான செயல்பாடுகளால், தளராத முயற்சிகளால் புதிய உயரங்களை அடையும் வாய்ப்பாக புத்தாண்டை ஆக்குவோம். புதுப்பொலிவை, புது வளர்ச்சியை, புதுச் சவால்களை, புது வெற்றிகளை எதிர்கொள்வோம். அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.