கும்பகோணம் || தீயில் கருகிய 94 குழந்தைகள் - இன்று 20 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு.!
20th anniversary kumbakonam school fire accident
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் காசிராமன் தெருவில் அமைந்திருந்த ஸ்ரீ கிருஷ்ணா உதவிபெறும் தொடக்கப் பள்ளியில் கடந்த 2004-ம் ஆண்டு ஜூலை மாதம் 16-ந்தேதி ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 18 குழந்தைகள் படுகாயம் அடைந்தனர்.
இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து ஒவ்வொரு ஆண்டும் இறந்த குழந்தைகளின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஜூலை 16 ஆம் தேதியான இன்று 20-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
இந்த நாளை முன்னிட்டு தீ விபத்து நடந்த பள்ளியின் முன்பு குழந்தைகளை இழந்த பெற்றோர்கள் சார்பில் நினைவஞ்சலி கூட்டமும், கும்பகோணம் பாலக்கரையில் உள்ள நினைவு மண்டபத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலியும் செலுத்தப்பட்டது. பலியான குழந்தைகளுக்கு பெற்றோர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து, இறந்த 94 குழந்தைகளின் உருவப்படங்களுடன் வைக்கப்பட்டிருந்த பேனருக்கு மலர்களால் அலங்கரித்து பெற்றோர்கள், உறவினர்கள், அரசியல் கட்சியினர், பொதுமக்கள், பள்ளி முன்னாள் மாணவர்கள் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர். மேலும், இன்று மாலை மகாமக குளத்தில் மோட்ச தீபம் ஏற்றப்பட உள்ளது.
English Summary
20th anniversary kumbakonam school fire accident