ராமேஸ்வரத்தில் சோகம் : இலங்கை கடற்படையின் ரோந்து படகு துரத்திச் சென்றதில் படகு கவிழ்ந்து தமிழக மீனவர்கள் 4 பேர் மாயம்..!!
4 TN Fishermen Missing With Boat By Srilankan Navy Collided
இலங்கை கடற்படையின் ரோந்துப் படகு மோதியதில் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 4 பேர் விசைப் படகுடன் மாயமாகியுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
கடந்த புதன்கிழமை (ஜூலை 31) ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து சுமார் 400 விசைப் படகுகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். இந்நிலையில் நேற்று இரவு அவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினர் ரோந்துக்கு வந்துள்ளனர்.
இலங்கைக் கடற்படையின் ரோந்துப் படகுகளைக் கண்ட தமிழக மீனவர்கள்,கைது செய்யப் பட்டு விடுவோம் என்று பயந்து கரை நோக்கி படகுகளை திருப்பிச் செலுத்திய போது, இலங்கைக் கடற்படையினர் அவர்களை துரத்திக் கொண்டு வந்துள்ளனர். அப்போது இலங்கையின் ரோந்துப் படகு, கார்த்திகேயன் என்பவரின் விசைப் படகின் மேல் மோதியுள்ளதாகத் தெரிகிறது.
இதில் கார்த்திகேயனின் படகு நடுக்கடலில் மூழ்கியுள்ளது. இதையடுத்து அந்த விசைப் படகில் இருந்த மலைச்சாமி, முத்து முனியாண்டி, மூக்கையா, ராமச்சந்திரன் ஆகிய 4 மீனவர்கள் மாயமாகி உள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
அந்த மீனவர்கள் என்ன ஆனார்கள் எனபது குறித்த தகவல் எதுவும் இன்னும் தெரிய வராததால், அந்தப் படகின் உரிமையாளர் கார்த்திகேயன் மாயமான அந்த 4 மீனவர்களையும் மீட்டுத் தருமாறு மீன்வளத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார். இச்சம்பவம் ராமேஸ்வரம் பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் தான் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 23 தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்களை இலங்கை ஊர்க்காவல் நீதிமன்றம் விடுவித்தது குறிப்பிடத்தக்கது.
English Summary
4 TN Fishermen Missing With Boat By Srilankan Navy Collided