விபத்தில் நண்பர்கள் உயிரிழப்பு; துக்கத்தில் வாலிபர் ஒருவரின் விபரீத முடிவு..!
A young man tragic decision in the wake of the death of his friends in an accident
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள குருவரெட்டியூர் பகுதியை சேர்ந்தவர் 28 வயதுடைய பூபாலன். என்ஜினீயரிங் முடித்துள்ள இவர் குருவரெட்டியூரில் உள்ள இருசக்கர வாகன ஷோரூமில் விற்பனையாளராக வேலை செய்து வந்துள்ளார்.
இவருடைய நெருங்கிய நண்பர்களான பாபு மற்றும் கவின் கடந்த ஜனவரி மாதம் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்து விட்டனர். இவ்வாறு நண்பர்கள் இறந்த துக்கத்தை பூபாலனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அத்துடன் தனக்கு உடல்நிலை சரியில்லை எனக்கூறி பெற்றோர்களிடம் புலம்பி வந்துள்ளார். இதனால் அவரது பெற்றோர்கள் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு பரிசோதித்த டாக்டர்கள் பூபாலன் உடலில் எந்த வித பாதிப்பும் இல்லை என கூறியுள்ளனர். ஆனாலும் பூபாலன் தனது நண்பர்கள் இறந்து போனதை நினைத்து வேதனைப்பட்டு வந்துள்ளார். ஒரு கட்டத்தில் அவர் மிகவும் மனமுடைந்து போயுள்ளார்.
இந்த நிலையில் நேற்று பூபாலன் வீட்டில் தனியாக இருந்த நேரத்தில் நண்பர்கள் இல்லாத இந்த உலகத்தில் அவர், "இனி வாழ்வதை விட சாவதே மேல்" என்ற முடிவுக்கு வந்த்துள்ளார். இந்த விபரீத எண்ணத்தினால் தனது அறையில் உள்ள மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

வெளியில் சென்றிருந்த அவருடைய தாயார் ஜெயம்மாள் வீட்டுக்கு வந்து பார்த்தபோது கதவு உள்பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்துள்ளது. இதனால் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது தனது ஆசை மகன் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் கதறி அழுதுள்ளார். அத்துடன், இது குறித்து அவர் அம்மாபேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்த்துள்ளார்.
அதன் அடிப்படையில், போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றுள்ளனர். பூபாலனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தற்கொலை சம்வபம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Note;- தற்கொலை ஒருபோதும் எதற்கும் தீர்வாகாது. மன அழுத்தம் அல்லது தற்கொலை எண்ணங்கள் ஏற்பட்டால், அவற்றை எதிர்கொள்ள உங்களுக்கு உதவி தேவை என்பதை நினைவில் கொள்ளுங்கள். தயவுசெய்து பின்வரும் உதவி எண்களை அழைக்கவும்:
தமிழக சுகாதார சேவை உதவி மையம்: 104
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம்: 044-24640050
இந்த எண்கள் மூலம், மனநல ஆலோசகர்கள் மற்றும் நிபுணர்களுடன் தொடர்பு கொண்டு உங்கள் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளலாம். அவர்கள் உங்களுக்குத் தேவையான ஆதரவையும் வழிகாட்டுதலையும் வழங்குவார்கள்.
English Summary
A young man tragic decision in the wake of the death of his friends in an accident