சென்னையில் ஏ.சி மின்சார ரெயில் சேவை ரத்து - காரணம் என்ன?
ac electric train service cancelled in chennai
கடந்த 19-ந்தேதி சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் தமிழகத்தின் முதல் ஏ.சி.மின்சார ரெயில் சேவை பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. இந்த ரெயில் சென்னை கடற்கரையில் இருந்து காலை 7 மணிக்கு புறப்பட்டு 8.35 மணிக்கு செங்கல்பட்டு ரெயில் நிலையம் செல்கிறது. அங்கிருந்து காலை 9 மணிக்கு புறப்பட்டு 10.40 மணியளவில் கடற்கரை ரெயில் நிலையம் வந்தடைகிறது.
பின்னர், கடற்கரையில் இருந்து மாலை 3.45 மணிக்கு புறப்பட்டு 5.25 மணிக்கு செங்கல்பட்டு சென்றடையும். மறுமார்க்கமாக செங்கல்பட்டில் இருந்து மாலை 5.45 மணிக்கு புறப்பட்டு இரவு 7.15 மணிக்கு கடற்கரை ரெயில் நிலையம் வந்தடைகிறது. பின்னர், இரவு கடற்கரையில் இருந்து 7.35 மணிக்கு புறப்பட்டு 8.30 மணிக்கு தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படுகிறது.

இந்த ரெயில் தினந்தோறும் 3 முறை மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று மதியம் இயக்கப்படும் ஏ.சி.மின்சார ரெயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில் தெரிவித்து இருப்பதாவது:-
"பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று மதியம் 3.45 மணிக்கு சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு செல்லும் ஏ.சி. மின்சார ரெயில், மறுமார்க்கமாக செங்கல்பட்டில் இருந்து மாலை 5.45 மணிக்கு கடற்கரை செல்லும் ஏ.சி.மின்சார ரெயில் சேவை ரத்து செய்யப்படுகிறது" என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
ac electric train service cancelled in chennai