ஷங்கரின் கேம் சேஞ்சர் தோல்விக்கான காரணம் – இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் விளக்கம்
The reason for the failure of Shankar Game Changer Director Karthik Subbaraj explains
பிரபல இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண், கியாரா அத்வானி நடிப்பில் வெளியான கேம் சேஞ்சர் திரைப்படம், 2025 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியானது. ஆனால், இந்த படம் ரசிகர்களிடம் பெரிதும் வரவேற்பு பெறாமல், பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. ரூ.400 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம், உலகம் முழுவதும் ரூ.186.28 கோடியே வசூலித்த நிலையில், ஷங்கருக்கு இது இந்தியன் 2 படத்திற்குப் பிறகு தொடர்ச்சியாக வந்த இரண்டாவது மாபெரும் தோல்வியாக மாறியது.
இந்நிலையில், கேம் சேஞ்சர் படத்தின் மூலக் கதையை வழங்கிய இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ், சமீபத்தில் கலட்டா பிளஸுக்கு அளித்த பேட்டியில் இந்த தோல்விக்கான காரணங்களை பகிர்ந்துள்ளார்.
"கதையின் ஒன்லைன் தான் நான் கொடுத்தேன். ஒரு நேர்மையான ஐஏஎஸ் அதிகாரி, அரசியல்வாதியாக மாறும் பயணமே அதன் மையம். ஷங்கர் சார் அந்தக் கதையை விரிவுபடுத்தி படம் எடுப்பது எப்படி இருக்கும் என்று ஆவலுடன் எதிர்பார்த்தேன். ஆனால், இறுதியில் கதையின் திசை முற்றிலும் மாறிவிட்டது," எனக் கூறியுள்ளார் கார்த்திக் சுப்பராஜ்.
அதே பேட்டியில் அவர் மேலும் கூறியதாவது:"பல எழுத்தாளர்கள் இப்படத்தில் பணியாற்றினர். திரைக்கதையில் பல மாற்றங்கள் செய்யப்பட்டன. அதனால் கதையின் சாராம்சமும் மாறியது. சினிமாவுக்காக செய்யப்படும் இந்த மாதிரியான மாற்றங்களை மக்கள் எப்படி ஏற்கிறார்கள் என்பதை யாராலும் கணிக்க முடியாது. இது ஏன் தோல்வி அடைந்தது என்பதை துல்லியமாகச் சொல்ல முடியாது."
படம் வெளியான சமயத்தில் ஷங்கர் இயக்கத்தில் ஒரு கதையை அளிக்க வாய்ப்பு வழங்கியதற்காக, கார்த்திக் சுப்பராஜ் எக்ஸ் தளத்தில் (முன்னாள் ட்விட்டர்) நன்றியுடன் ஒரு பதிவையும் பகிர்ந்திருந்தார்.
கேம் சேஞ்சர் படத்தில் ராம் சரண், கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ்.ஜே.சூர்யா, ஸ்ரீகாந்த், சுனில், ஜெயராம், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். ஆனால் விமர்சகர்களிடம் களையிழந்த இந்த படம், ரசிகர்களிடமிருந்தும் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. அதனால், ஷங்கரின் பிரமாண்ட முயற்சி எதிர்பாராத முறையில் தோல்வியடைந்துள்ளது.
English Summary
The reason for the failure of Shankar Game Changer Director Karthik Subbaraj explains