கட்டாயப் பாட மொழியாகவும், பயிற்று மொழியாகவும் உயர்த்துவதே சாதனை - மருத்துவர் ராமதாஸ்!! - Seithipunal
Seithipunal


தமிழை கட்டாயப் பாட மொழியாகவும், பயிற்று மொழியாகவும் உயர்த்துவதே சாதனை: 3 ஆண்டுகளில் பயனுள்ள திட்டம் இல்லை என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அறிக்கையில் கூறிவுள்ளதாவது :-

தமிழ்நாட்டில் கடந்த மூன்றாண்டுகளில் தமிழ் வளர்ச்சிக்காக ஏராளமான திட்டங்கள் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டிருப்பதாகவும், அத்திட்டங்களைச் செயல்படுத்தியதற்காக தமிழக அரசை ஆன்றோரும், சான்றோரும் பாராட்டுவதாகவும் தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. இதை வழக்கமான மூன்றாண்டு சாதனை விளம்பரமாகக் கருதி கடந்து செல்ல முடியவில்லை. அன்னைத் தமிழ் வளர்ச்சிக்காக 25 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள தமிழ் பயிற்று மொழி சட்டம் போன்ற ஆக்கப்பூர்வமான திட்டங்களைச் செயல்படுத்தாமல், பெயரளவிலான திட்டங்களை மட்டும் செயல்படுத்துவதால் எந்த பயனும் இல்லை.

தமிழ்நாடு அரசின் தமிழ்வளர்ச்சித் துறையால் கடந்த மூன்றாண்டுகளில் செயல்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் தமிழறிஞர்களுக்கான விருதுகள், அறிஞர்களின் நூல்கள் நாட்டுடமை, பிறமொழி படைப்புகளை தமிழில் மொழிபெயர்த்தல், தமிழ் இருக்கைகளை அமைக்க நிதி ஒதுக்குதல் போன்ற திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருபவை தான். தமிழறிஞர்களுக்கு வீடு வழங்கும் திட்டம் என்பது ஆட்சியாளர்களுக்கு வேண்டிய சிலருக்கு மட்டும் சலுகை வழங்குவதற்கான திட்டம் ஆகும். அன்னை தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு இவை எந்த அளவுக்கு பங்களிக்கும்? என்பது பெரிய வினாக்குறி தான்.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் பட்டப்படிப்பு வரை தமிழ்மொழி கட்டாயப் பாடமாக்கப்பட வேண்டும்; முதல் கட்டமாக பள்ளிக்கல்வி வரை தமிழ் கட்டாய பயிற்றுமொழியாக மாற்றப்பட வேண்டும். இந்த இரு திட்டங்கள் தான் அன்னை தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு பங்களிக்கக் கூடியவை ஆகும். தமிழ் வளர்ச்சி என்ற இலக்கிற்கு உயிர்கொடுக்கக் கூடியவை இந்த இரண்டும் தான். இவற்றை செயல்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்காமல், பிற விளம்பரத் திட்டங்களை செயல்படுத்துவதும், அவற்றை சாதனையாக காட்டிக் கொள்வதும் உயிரற்ற உடலுக்கு செய்யப்படும் அலங்காரமாகவே பார்க்கப்படும்.

தமிழ்நாட்டில் அனைத்துப் பள்ளிகளிலும் குறைந்தபட்சம் 8&ஆம் வகுப்பு வரை தமிழை கட்டாய பயிற்று மொழியாக அறிவித்து சட்டம் இயற்ற வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த 1999ஆம் ஆண்டு ஏப்ரல் 25ஆம் தேதி முதல் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 102 தமிழறிஞர்கள் சாகும்வரை உண்ணாநிலைப் போராட்டம் நடத்தினர். அவர்களின் கோரிக்கையை ஏற்பதாகக் கூறிய அப்போதைய கலைஞர் அரசு, எட்டாம் வகுப்புக்கு மாற்றாக ஐந்தாம் வகுப்பு வரை தமிழைக் கட்டாய பயிற்றுமொழியாக அறிவித்து அரசாணை பிறப்பித்தது. வலிமையான சட்டம் கொண்டுவர வேண்டும் என்று தமிழறிஞர்கள் வலியுறுத்திய நிலையில், வலிமையற்ற அரசாணையை மட்டுமே 19.11.1999ஆம் நாளில் அரசு பிறப்பித்தது. அந்த ஆணை செல்லாது என்று அடுத்த சில மாதங்களில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. உடனடியாக அந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் திமுக அரசு மேல்முறையீடு செய்தது. அதன்பின் 25 ஆண்டுகளாகி விட்ட நிலையில், அந்த வழக்கை விசாரணைக்கு கொண்டு வருவதற்கோ, தமிழைக் கட்டாயப் பயிற்றுமொழியாக அறிவித்து சட்டம் இயற்றவோ தமிழகத்தை ஆண்ட கட்சிகள் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

அதேபோல், எனது தொடர் வலியுறுத்தலின் காரணமாக அனைத்துப் பள்ளிகளிலும் பத்தாம் வகுப்பு வரை தமிழைக் கட்டாயப் பாடமாக்கும் சட்டத்தை 09.06.2006-ஆம் நாள் சட்டப்பேரவையில் கொண்டு வந்து கலைஞர் அரசு நிறைவேற்றியது. அச்சட்டத்தின்படி 2006-ஆம் ஆண்டில் ஒன்றாம் வகுப்பு, 2007-ஆம் ஆண்டில் இரண்டாம் வகுப்பு என படிப்படியாக தமிழ் கட்டாயப்பாடமாக்கப்பட்டு 2015-16ஆம் ஆண்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்விலும் தமிழ் கட்டாயப் பாடமாக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அதன்பிறகு மேலும் பத்தாண்டுகள் ஆகிவிட்ட போதிலும் இன்னும் தமிழ் கட்டாயப்பாடமாக்கப் படவில்லை. இதற்குக் காரணம் சில தனியார் பள்ளிகள் உச்சநீதிமன்றம் வரை சென்று தொடர்ந்த வழக்குகள் தான்.

தமிழ்க் கட்டாயப் பாடச் சட்டத்தின் செயல்பாடு கடந்த பத்தாண்டுகளாக முடக்கி வைக்கப்பட்டிருக்கும் நிலையில், அதை அகற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை முடிந்து உச்சநீதிமன்றத்தில் இப்போது நிலுவையில் உள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டு தொடக்கத்தில் இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, போதிய காலம் இல்லாததால் 2023-24ஆம் ஆண்டில் தமிழ்க் கட்டாயப் பாடச் சட்டத்தை செயல்படுத்த தடை விதித்த உச்சநீதிமன்றம், கோடை விடுமுறைக்கு பின் கடந்த ஆண்டு ஜூலை மாதம் இறுதி விசாரணை நடத்தப் படும் என்று அறிவித்தது. ஆனால், உச்சநீதிமன்றத்திற்கு அடுத்த கோடை விடுமுறையே வந்து விட்ட போதிலும் அந்த வழக்கை விசாரணைக்கு கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால், 2024-25ஆம் ஆண்டிலும் தமிழ்மொழி கட்டாயப்பாடச் சட்டத்தை தமிழகத்தில் நிறைவேற்ற வாய்ப்பில்லை.

கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை தமிழ்மொழியில் எழுதுவதை உறுதி செய்ய வேண்டும் என்று 30 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறேன். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி கடந்த ஆண்டு சென்னை முதல் மதுரை வரை தமிழைத் தேடி என்ற தலைப்பில் பயணம் மேற்கொண்டேன். ஆனாலும் அவ்வப்போது வணிகர்களுக்கு வேண்டுகோள் விடுப்பதைத் தவிர பெயர்ப்பலகைகளில் தமிழைக் கட்டாயமாக்க தமிழ்வளர்ச்சித் துறை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாதது கண்டிக்கத்தக்கது.

தமிழ்வளர்ச்சிக்காக மேற்கொள்ளப்பட வேண்டிய முதன்மை நடவடிக்கைகள் தமிழ் பயிற்று மொழி, தமிழ்க் கட்டாயப்பாட மொழி, கடைகளின் பெயர்ப்பலகைகளில் தமிழ் ஆகியவற்றை உறுதி செய்வது தான். தமிழ் வளர்ச்சியில் சாதனை படைத்து விட்டதாக வெற்று விளம்பரங்கள் செய்வதைத் தவிர்த்து, தமிழ் வளர்ச்சிக்கான ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன் என்று இவ்வாறு கூறிவுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Achievement to be made a compulsory subject and medium of instruction


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->