அதானி ஊழல் : நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணையை ஆதரிக்க தயார் -மின்வாரிய ஊழல் குறித்து சிபிஐ விசாரணைக்கு அரசு தயாரா?மருத்துவர் அன்புமணி இராமதாஸ்
Adani Scam Ready to Support Parliamentary Joint Committee Inquiry Is Government Ready for CBI Inquiry on Electricity Scam Doctor Anbumani Ramadoss
அதானி ஊழல்: நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணையை ஆதரிக்க தயார் - மின்வாரிய ஊழல் குறித்து சிபிஐ விசாரணைக்கு அரசு தயாரா? என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்!
அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, இந்திய சூரியஒளி மின்உற்பத்திக் கழகத்திடமிருந்து சூரியஒளி மின்சாரத்தை வாங்குவதற்காக தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு அதானி குழுமம் கையூட்டு கொடுத்ததாக அமெரிக்க நீதிமன்றத்தில் தொடரப் பட்டுள்ள வழக்கு குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் பா.ம.க. உறுப்பினர்கள் எழுப்பிய வினாக்களுக்கு நேரடியாக பதிலளிக்க முடியாத முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்த விவகாரத்தை திசைதிருப்பும் வகையில் பேசியிருக்கிறார். தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு அதானி குழுமம் கையூட்டு கொடுத்ததாக கூறப்படும் குற்றச்சாட்டால், தமிழ்நாட்டின் மானம் அமெரிக்காவில் கப்பலேறிக் கொண்டு இருக்கும் நிலையில், அதுகுறித்து விளக்கம் அளிக்க முதலமைச்சர் மறுப்பதும், அஞ்சுவதும் கண்டிக்கத்தக்கது.
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தில் இதுகுறித்து பாமக உறுப்பினர்கள் எழுப்பிய சிக்கலுக்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “அதானி குழுமம் தொடர்பாக வெளியில் பரப்பப்படும் தவறான செய்திகளுக்கு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஏற்கெனவே விளக்கம் அளித்துவிட்டார். இதுதொடர்பாக, பா-மகவுக்கும், பாஜகவுக்கும் நான் எழுப்பும் கேள்வி என்னவென்றால், அதானி ஊழல் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணையை ஆதரிக்க இந்த இரு கட்சிகளும் தயாரா? என்பதுதான்” என வினவியுள்ளார்.
அதானி மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணையோ, அல்லது வேறு எந்த விசாரணையோ அனைத்தையும் ஆதரிக்க பாட்டாளி மக்கள் கட்சி தயாராக இருக்கிறது. இதில் பாமகவுக்கு எந்த தயக்கமும் இல்லை. ஏற்கெனவே ஒரு செய்தியாளர் சந்திப்பில் இதுதொடர்பாக என்னிடம் கேட்டபோது, அதானி மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறேன். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இதுகுறித்து எதுவும் தெரியாது போல் இருக்கிறது. அதனால் தான் சட்டப்பேரவையில் இப்படியொரு கேள்வி எழுப்பி இருக்கிறார். மீண்டும் ஒருமுறை கூறுகிறேன்... அதானி மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை உள்ளிட்ட எந்த விசாரணையாக இருந்தாலும் அதை ஆதரிக்க பாட்டாளி மக்கள் கட்சி தயார்.
ஆனால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நான் எழுப்ப விரும்பும் வினா என்னவென்றால், தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு அதானி குழுமம் கையூட்டு கொடுத்ததாக அமெரிக்க நீதிமன்றத்தில் தொடரப் பட்டுள்ள வழக்கில் கூறப்பட்டிருக்கும் குற்றச்சாட்டு குறித்து அவருடைய பதில் என்ன? என்பதுதான்.
இந்த வினாவிற்கு விடையளிக்க முடியாத மு.க.ஸ்டாலின், அதானி குழுமம் தொடர்பான குற்றச்சாட்டு குறித்து மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஏற்கெனவே விளக்கம் அளித்துவிட்டார் என்று கூறி மோசடி&ஊழல் அமைச்சர் செந்தில் பாலாஜியின் முதுகுக்குப் பின்னால் சென்று ஒளிந்துகொள்வது ஏன்?
அதானி விவகாரம் தொடர்பாக பா.ம.க. எழுப்பும் கேள்வி மிகவும் தெளிவானது. “அதானி குழுமம் தயாரிக்கும் சூரியஒளி மின்சாரத்தை, இந்திய சூரியஒளி மின்உற்பத்திக் கழகம் வாங்கி, அதை தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களின் மின்வாரியங்களுக்கு விற்பனை செய்கிறது. கடந்த 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்திய சூரியஒளி மின்உற்பத்திக் கழகத்திடம் இருந்து 1000 மெகாவாட் மின்சாரம் வாங்குவதற்கு தமிழ்நாடு மின்சார வாரியம் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது. ஒரு யூனிட் ரூ.2.61 என்ற விலைக்கு மின்சாரம் வாங்க ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. ஆனால், வெளிச்சந்தை விலையில் இதைவிட குறைந்த விலையில் மின்சாரம் கிடைக்கும் நிலையில், சூரியஒளி மின்உற்பத்திக் கழகம் அதிக விலை நிர்ணயம் செய்திருப்பதால், அதை வாங்க மின்வாரியங்கள் தயங்கியுள்ளன. இத்தகைய சூழலில், அதானி குழும நிறுவனங்களின் பிரதிநிதிகள் தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில மின்வாரியங்களின் அதிகாரிகளைச் சந்தித்து, ஊக்குவிப்பு அளித்ததாகவும், அதன்பின் அந்த மின்வாரியங்கள் முன்வந்து ஒப்பந்தம் செய்து கொண்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அமெரிக்காவின் நியூயார்க் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கில், இந்தக் குற்றச்சாட்டுகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. இதுகுறித்து தமிழ்நாடு அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்பதுதான் பாட்டாளி மக்கள் கட்சி எழுப்பியுள்ள வினா ஆகும்”.
ஆனால், அமைச்சர் செந்தில் பாலாஜி கூறிய பதில், தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கும், அதானி குழுமத்திற்கும் இடையே நேரடியாக எந்த ஒப்பந்தமும் செய்துகொள்ளப்படவில்லை என்பதுதான்.
அதானி குழுமத்திற்கும் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கும் நேரடியாக ஒப்பந்தம் செய்துகொள்ளப் பட்டிருப்பதாக பா.ம.க. ஒரு போதும் கூறவில்லை. அதானி குழுமம் தயாரித்த மின்சாரத்தை இந்திய சூரியஒளி மின்உற்பத்திக் கழகத்தின் வாயிலாக வாங்குவதற்காக தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு அதானி குழுமம் கையூட்டுக் கொடுத்ததாக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருக்கிறதே, அது குறித்து தமிழ்நாடு அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்றுதான் பா.ம.க. வலியுறுத்தி வருகிறது.
ஆனால், இந்த கேள்வியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புரிந்துகொண்டும், புரியாதவரை போல நடித்துக் கொண்டிருக்கிறார்; பதிலளிக்க மறுத்துக் கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டில் நடைபெற்ற ஊழல் குறித்து விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்று வலியுறுத்தினால், தேசிய அளவில் நடைபெற்ற அதானி ஊழல் குறித்து பா.ம.க. ஏன் வலியுறுத்தவில்லை? அதானிக்கு எதிராக ஏன் குரல் கொடுக்கவில்லை? என்று தி.மு.க. அதன் கூலிப்படையினரை வைத்து எதிர்க்கேள்விகளை எழுப்பிக் கொண்டிருக்கிறது.
மின்வாரிய ஊழல் தொடர்பாக தமிழ்நாடு அரசையும், அதானி குழுமத்தையும் பா.ம.க. பிரித்துப் பார்க்கவில்லை. தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு அதானி குழுமம் கையூட்டு கொடுத்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தி, தவறு நடந்தது உறுதி செய்யப்பட்டால், அதற்காக தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் கையூட்டு வாங்கியது அதிகாரிகளோ, அமைச்சர்களோ அல்லது அதற்கும் மேல் உள்ளவர்களோ யாராக இருந்தாலும் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்படுவார்கள். அதே நேரத்தில், அவர்களுக்கு கையூட்டு கொடுத்தது அதானி குழும அதிகாரிகளோ, உயரதிகாரிகளோ அல்லது அதையும் தாண்டி அதானியோ யாராக இருந்தாலும் கைது செய்யப்படுவார்கள்.
தமிழ்நாடு மின்சார வாரியம் கிட்டத்தட்ட 2 லட்சம் கோடி ரூபாய் கடன் சுமையில் சிக்கித் தவிக்கிறது. ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் கோடிக்கும் கூடுதலாக வட்டி செலுத்தப்படுகிறது. கடந்த 3 ஆண்டுகளில் ரூ.40 ஆயிரம் கோடி அளவுக்கு மின்கட்டணம் உயர்த்தப்பட்ட பிறகும், தமிழ்நாடு மின்சார வாரியம் இன்னும் இழப்பில் தான் நீந்திக் கொண்டிருக்கிறது. இதற்குக் காரணம் அதானி குழுமம் போன்ற பல நிறுவனங்களிடம் இருந்து, தங்களுக்குக் கிடைக்கும் பயன்களுக்காக, அதிக விலை கொடுத்து மின்சாரத்தை ஆட்சியாளர்கள் வாங்குவதுதான். ஆட்சியாளர்கள் இலாபம் பெறுவதற்காக மின்சார வாரியத்தை நஷ்டமாக்கி, அதை சரி செய்வதற்காக மின்கட்டணத்தை உயர்த்தி மக்களின் பணத்தைப் பிடுங்குவதை அனுமதிக்க முடியாது. அதற்காகத்தான் அதானி குழுமத்திடம் இருந்து மின்சார வாரியம் கையூட்டு பெற்றதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க வேண்டும் என பா.ம.க. வலியுறுத்துகிறது.
மடியில் கனமில்லை என்றால், வழியில் பயம் தேவையில்லை. அதானி குழுமத்திடம் இருந்து, இந்திய சூரியஒளி மின்உற்பத்திக் கழகத்தின் வாயிலாக மின்சாரம் வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்துகொள்வதற்காக தமிழ்நாடு மின்சார வாரியம் கையூட்டு பெறவில்லை என்றால், இந்தக் குற்றச்சாட்டு குறித்து உடனடியாக விசாரணைக்கு ஆணையிடலாம். அவ்வாறு செய்யாமல், இந்த சிக்கல் குறித்து பேசுவதற்கே தமிழ்நாடு அரசும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் அஞ்சுவதும், பதில் கூற மறுப்பதும் ஏன்?
அதானி குழுமத்தின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்தப்படுவதை பாட்டாளி மக்கள் கட்சி முழுமையாக ஆதரிக்கிறது. அதேபோல், தமிழ்நாடு மின்வார வாரியத்திற்கு அதானி குழுமம் கையூட்டு வழங்கியதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து சிபிஐ விசாரணைக்கோ, அல்லது உச்சநீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில் சிறப்புப் புலனாய்வுப் பிரிவின் விசாரணைக்கோ ஆணையிடுவதற்கு தயாரா? என்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்!
English Summary
Adani Scam Ready to Support Parliamentary Joint Committee Inquiry Is Government Ready for CBI Inquiry on Electricity Scam Doctor Anbumani Ramadoss