சென்னையில் தெருக்களில் ஏஐ கேமரா கண்காணிப்பு: விதிமீறல்களுக்கு கடும் அபராதம்!
AI camera surveillance on the streets of Chennai Heavy fines for violations
சென்னை நகரத்தில் போக்குவரத்து ஒழுங்கை நிலைநாட்டும் முயற்சியின் ஒரு பகுதியாக, தெருக்களில் எய்ஐ தொழில்நுட்பக் கேமராக்கள் (AI Cameras) அமைக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக ஜிஎஸ்டி சாலை மற்றும் அண்ணா நகர் பகுதிகளில் இந்த கேமராக்கள் நிறுவப்படுகின்றன.
இந்த கேமராக்கள், வாகன ஓட்டிகளின் விதிமீறல்களை தானாகவே பதிவு செய்து, அபராதங்களை கணக்கிட்டு சம்பந்தப்பட்ட நிர்வாகங்களுக்கு தகவல் அனுப்பும் முறையில் செயல்படுகின்றன. கடந்த காலங்களில் குடித்து வாகனம் ஓட்டினால் ரூ.1,000 முதல் ரூ.1,500 வரை அபராதம் விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது புதிய விதிகளின்படி, இது ரூ.10,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதேசமயம், சிறை தண்டனையும் சேர்க்கப்பட்டுள்ளது – குறைந்தது 6 மாதங்கள் வரை. மீண்டும் மீண்டும் இந்த தவறை செய்பவர்களுக்கு ரூ.15,000 அபராதம் மற்றும் 2 ஆண்டு சிறை தண்டனை வரை விதிக்கப்படும்.
அதேபோல், சீட் பெல்ட் கட்டாமல் வாகனம் ஓட்டுவது பழைய ரூ.100 அபராதத்திலிருந்து இப்போது ரூ.1,000 ஆக உயர்ந்துள்ளது. வாகனம் ஓட்டும் போதே மொபைல் போனைப் பயன்படுத்தினால் ரூ.5,000 அபராதம். உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டினாலும் ரூ.5,000 அபராதம். டிரிபிள் ரைடிங் செய்தாலும் ரூ.100-இல் இருந்து ரூ.1,000 ஆக உயர்வு.
இவை மட்டுமல்லாமல், மாநகராட்சி அதிகாரிகள் தெருக்களில் சட்டவிரோதமாக குப்பை கொட்டுதல், கழிவுகளை பிரிக்காமல் வீசுதல், கால்நடைகளை சாலையில் விட்டுவிடுதல் போன்ற செயல்களுக்கு நேரில் அபராதம் விதித்து வருகின்றனர். இதற்காக 468 பாயின்ட் ஆஃப் சேல் (PoS) கருவிகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் தற்போது வரை ரூ.5 லட்சம் வரை அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
அபராத தொகைகளை பொதுமக்கள் நேரடியாக UPI, டெபிட்/கிரெடிட் கார்டுகள், டிமாண்ட் டிராப்ட் அல்லது காசோலை வழியாக செலுத்த முடியும். இதனால் ஊழல் வாய்ப்பு குறைக்கப்பட்டு, கண்காணிப்பு நடைமுறைகளும் மெருகூட்டப்படுகின்றன.
மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், தற்போது வரை குப்பை தொடர்பான சட்ட மீறல்களுக்காக மொத்தமாக ரூ.17.96 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதை கண்காணிக்க 15 பறக்கும் படை வாகனங்கள் நகரின் பல பகுதிகளில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இத்தகைய தொழில்நுட்ப வசதிகள் மூலம் சென்னை நகரம் இன்னும் சுத்தமாகவும், ஒழுங்காகவும் மாறும் என மாநகராட்சி நம்பிக்கை தெரிவித்துள்ளது.
English Summary
AI camera surveillance on the streets of Chennai Heavy fines for violations