சென்னையில் கொடிய வகை போதைப் பொருள் - தமிழக அரசுக்கு பறந்த அவரச கோரிக்கை!
AMMK TTV Dhinakaran Say About Kilampakkam and TN Drugs issue
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ரூ.70 கோடி மதிப்பிலான மெத்தம்பட்டமைன்(Methamphetamine) எனும் கொடிய வகை போதைப் பொருள் பறிமுதல் - இளைய சமுதாயத்திற்கு பேரழிவை ஏற்படுத்தும் போதைப் பொருட்களின் நடமாட்டத்தை அடியோடு ஒழிப்பது எப்போது? என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து ராமநாதபுரம் மூலமாக இலங்கைக்கு கடத்தவிருந்த 6 கிலோ எடை கொண்ட மெத்தம்பட்டமைன் (Methamphetamine) எனும் கொடிய வகை போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும், அதன் தொடர்ச்சியாக செங்குன்றம் அருகே போதைப் பொருட்களை பதுக்கி வைப்பதற்காகவே தனி குடோன் இயங்கி வந்தது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாகவும் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை அளிக்கின்றன.
திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற கடந்த மூன்றாண்டுகளில் தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் தாரளமாகக் கிடைக்கும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களுக்கு பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், இளைய சமுதாயத்தினர் என அனைத்து தரப்பினரும் அடிமையாகி வருவது அச்சத்தையும், வேதனையையும் ஏற்படுத்துகிறது.
தமிழகத்தில் நாள்தோறும் அரங்கேறும் கொலை, கொள்ளைச் உள்ளிட்ட சட்டம்- ஒழுங்கு சீர்கேடுகளுக்கு அடிப்படை காரணமாக அமைந்திருக்கும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்துமாறு பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசால், தற்போது 70 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்கள் சர்வசாதாரணமாக பேருந்துகள் மூலமாகவே கடத்தப்படும் சூழலை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளவர்களை தீவிர விசாரணைக்கு உட்படுத்தி, இந்த கடத்தல் பின்னணியில் இருப்பவர்களையும் கைது செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தமிழக அரசை டிடிவி தினகரன் கேட்டு கொண்டுள்ளார்.
English Summary
AMMK TTV Dhinakaran Say About Kilampakkam and TN Drugs issue