அத்திக்கடவு-அவினாசி திட்டத்தினை தொடக்கி வைத்த முதலமைச்சர் முக ஸ்டாலின்! - Seithipunal
Seithipunal


நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடும் விவசாயத்தை மேம்படுத்தும் வகையிலும், மக்களின் குடிநீர்த் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், கிடைக்கப் பெறும் நீரை வீணாக்காமல் நீர்நிலைகளில் தேக்கி வைக்கும் பொருட்டும், புதிய நீராதாரங்களை உருவாக்குதல், ஏற்கெனவே உள்ள நீர்நிலைகள் மற்றும் அதன் உட்கட்டமைப்புகளை நல்ல முறையில் பராமரித்தல், பாசனக் கட்டமைப்புகளான அணைகள், அணைக்கட்டுகள், நிலத்தடி தடுப்புச் சுவர்கள், கால்வாய்கள், வாய்க்கால்கள், ஏரிகள் போன்றவற்றை உருவாக்குதல், புனரமைத்தல் மற்றும் பராமரித்தல் போன்ற பல்வேறு முக்கியப் பணிகளை நீர்வளத்துறை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீவிர முயற்சிகளின் பயனாக தற்போது அத்திக்கடவு - அவிநாசி திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

கோவை மாவட்ட விவசாயிகளின் நீண்ட காலக் கோரிக்கைகளை ஏற்று 1972-ஆம் ஆண்டில் அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தைச் செயல்படுத்திட முனைந்து நடவடிக்கைகளை கலைஞர் மேற்கொண்டார். அந்நிலையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தால் 1976-க்குப் பின் இத்திட்டத்தில் தொய்வு ஏற்பட்டது. மீண்டும் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் இத்திட்டம் குறித்து மறுபடியும் ஆய்வு செய்து, திட்டத்தினை நிறைவேற்றிட ஒப்புதல் வழங்கினார். ஆனால் ஆட்சி மாற்றம் எற்பட்டதால் இத்திட்டத்தில் சுணக்கம் ஏற்பட்டது.

பின்னர், 2019-இல் இத்திட்டத்தைத் தொடங்கி நிறைவேற்றும் பணிகள் தொடர்ந்தன என்றாலும், 2021-இல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி அமைந்தபின்தான், இத்திட்டத்தினை நிறைவேற்றிட உறுதிபூண்டு, 1,916.41 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருத்திய நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டு பணிகள் விரைவு படுத்தப்பட்டன.

அதன் தொடர்ச்சியாகத் திட்டப் பணிகள் விரைந்து மேற்கொள்ளப்பட்டு பணிகளும் முடிவடைந்துள்ளன. சோதனை ஓட்டப் பணிகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ள நிலையில், அத்திக்கடவு அவிநாசி திட்டத்தினை முதலமைச்சர் இன்றைய தினம் காணொலிக் காட்சி வாயிலாகத் தொடங்கி வைத்தார்.

இத்திட்டத்தினைச் செயல்படுத்துவதன் மூலம் பவானி ஆற்றில் காளிங்கராயன் அணைக்கட்டின் கீழ்ப்புறத்திலிருந்து ஆண்டொன்றிற்கு 1.50 டி.எம்.சி உபரி நீரை வினாடிக்கு 250 கன அடி வீதம் 70 நாட்களுக்கு நீரேற்று முறையில், 1065 கி.மீ. நீளத்திற்கு நிலத்தடியில் குழாய்ப் பதிப்பின் மூலம் ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 24,468 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறும் வகையில் நீர்வளத்துறையின் 32 ஏரிகள், ஊராட்சி ஒன்றியத்தின் 42 ஏரிகள் மற்றும் 971 குளம் குட்டைகள், என மொத்தம் 1045 எண்ணிக்கையிலான ஏரிகள், குளம், குட்டைகளில் நீர் நிரப்பப்படும்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Athikadavu Avinashi Project CM MK Stalin


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->