அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்ட திமுக அரசு! தமிழகத்தில் நடப்பது போலீஸ் ஆட்சியா? அன்புமணி இராமதாஸ் கடும் கண்டனம்!
PMK Anbumani Ramadoss Condemn to DMK Govt MK Stalin Ponmudi issue
விழுப்புரம் மாவட்டம் அரசூர் கூட்டு சாலை என்ற இடத்தில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், காவல்துறையினரின் அத்துமீறலைக் கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் இருவேல்பட்டு கிராம மக்கள் மீது காவல்துறையினர் கடுமையாக அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை ஆண் காவலர்கள் அவமானப்படுத்தும் வகையில் இழுத்துச் சென்று அப்புறப்படுத்தியுள்ளனர். வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த அப்பாவி இளைஞர்களையும் காவல்துறையினர் தீவிரவாதிகளைப் போல இழுத்துக் கொண்டு சென்றுள்ளனர். காவல்துறையின் இந்த அத்துமீறல் கடுமையாக கண்டிக்கத்தக்கது என்று பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அவரின் அறிக்கையில், "உண்மையில் சாலைமறியல் செய்தவர்களை அகற்ற வேண்டும் என்பது காவல்துறையின் நோக்கம் இல்லை. மாறாக, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், கடந்த சில வாரங்களுக்கு முன் அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசப்பட்ட கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களை பழிவாங்க வேண்டும்; தண்டிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் இந்த அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. மக்கள் மீது ஆட்சியாளர்கள் கொண்டுள்ள வன்மத்தின் வெளிப்பாடு தான் இந்த தாக்குதலும், அவமதிப்பும் ஆகும்.
நவம்பர் -திசம்பர் மாதங்களில் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட இருவேல்பட்டு மற்றும் அதை சுற்றியுள்ள 18 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தங்களுக்கு உதவிகள் வழங்கப்படவில்லை என்று கூறி கடந்த திசம்பர் 3-ஆம் தேதி சாலைமறியல் போராட்டம் நடத்தினார்கள். அவர்களுடன் பேச்சு நடத்தச் சென்ற அமைச்சர் பொன்முடி மற்றும் அதிகாரிகள் மீது சேறு வீசப்பட்டது. அதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத்தேவையில்லை என்று அமைச்சர் பொன்முடி அப்போதே கூறியிருந்தாலும் கூட அதிகாரிகள் பெயரில் புகார் அளிக்கப்பட்டு வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசியவர்களை கைது செய்ய காவல்துறையினர் முயன்றதாகவும், அதற்காக அந்த ஊர் மக்களுக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது. அதைக் கண்டித்து தான் மக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசப்பட்டதை நியாயப்படுத்தவே முடியாது.
ஆனால், தங்களை நியாயவாதிகள் என்று காட்டிக் கொள்வதற்காக, அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று வெளியில் அறிவித்து விட்டு, அதிகாரிகளின் பெயரில் புகார் கொடுத்து அவர்களை கைது செய்ய முயன்றதும், அதற்காக அந்த ஊர் மக்களுக்கு தொல்லை தரப்பட்டதும் தான் பிரச்சினைகளுக்கு காரணம் ஆகும்.
சாலை மறியலில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்துவதில் கூட தவறு இல்லை. ஆனால், கலைந்து சென்ற மக்களை பயங்கரவாதிகளைப் பிடிப்பதைப் போல காவல்துறையினர் வேட்டையாடியதை மன்னிக்க முடியாது.
திமுகவை ஆட்சியில் அமர்த்தியவர்கள் மக்கள் தான். அவர்கள் தங்களுக்கான நீதியைக் கேட்டு போராடும் போது அமைச்சர் அவமதிக்கப்பட்டார் என்பதற்காக பல வாரங்கள் கழித்து அவர்கள் மீது அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்படுகிறது என்றால் ஆட்சியாளர்களின் மனதில் பழிவாங்கும் உணர்வு எந்த அளவுக்கு ஊறியிருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியும்.
இத்தகைய நிகழ்வுகளைப் பார்க்கும் போது தமிழ்நாட்டில் நடப்பது மக்களாட்சியா, போலீஸ் ஆட்சியா? என்ற ஐயம் தான் எழுகிறது. இவற்றுக்கெல்லாம் மக்கள் பாடம் புகட்டும் நாள் வெகுதொலைவில் இல்லை" என்று அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.
English Summary
PMK Anbumani Ramadoss Condemn to DMK Govt MK Stalin Ponmudi issue