இதை நம்பியெல்லாம் 2026-க்கு வந்துடாதீங்க - திமுகவை எச்சரித்த அண்ணாமலை!
BJP Annamalai say about Vikravandi ByElection
விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சிவா 1,24,053 வாக்குகள் பெற்று வெற்றிபெற்று உள்ளார். மேலும் அவர் 67757 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்துள்ளார்.
இரண்டாவது இடத்தில் பாமக வேட்பாளர் 56,296 வாக்குகளை பெற்றுள்ளார். கடந்த தேர்தல்களை விட பாமக இந்த தேர்தலில் 28 சதவிகித வாக்குகளை பெற்று அசத்தியுள்ளது.
மூன்றாவது இடத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா 10,602 வாக்குகளை பெற்றுள்ளார். இது கடந்த தேர்தலில் நாம் தமிழர் பெற்ற வாக்குகளை விட 2000 வாக்குகள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
திமுக எதிர்பார்த்ததை விட கூடுதலாக 17000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி கிடைத்துள்ளது. மேலும் இந்த தேர்தலில் திமுக, பாமகவை தவிர, நாம் தமிழர் கட்சி உட்பட 27 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்துள்ளனர்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவுகள் குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து தெரிவிக்கையில், "இந்த இடைத்தேர்தல் முடிவுகள் குறித்து ஆராய்ச்சி செய்வோம்.
இடைத்தேர்தல் முடிவு தமிழக மக்களின் தற்போதைய மனநிலை கிடையாது. இந்த தேர்தல் முடிவு ஒரு சார்பாக இருக்கக் கூடாது என்று நினைத்தோம்.
இந்த இடைத்தேர்தல் முடிவு வெற்றிக்கான குறியீடு இல்லை. இந்த இடைத்தேர்தல் முடிவை நம்பி 2026 இல் திமுகவால் வெற்றி பெற முடியாது.
இந்த இடைத்தேர்தலில் எங்கள் கூட்டணி கடுமையாக களப்பணி ஆற்றியது. வாக்களித்த மக்களுக்கு நன்றி" என்று அண்ணாமலை தெரிவித்தார்.
முன்னதாக தேர்தல் முடிவு குறித்து முதல்வர் முக ஸ்டாலின் தெரிவிக்கையில், திமுக வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்படவேண்டிய வெற்றியாக விக்கிரவாண்டி தேர்தல் அமைந்துள்ளது. விக்கிரவாண்டியில் சாதனை வெற்றியை வழங்கிய தொகுதி மக்களுக்கு நன்றி.
இந்த வெற்றி எங்களுக்கு பெரும் உற்சாகம், எழுச்சி, கூடுதல் பொறுப்பை கொடுத்துள்ளது. தேர்தலுக்காக அயராது உழைத்த இந்தியா கூட்டணி தலைவர்கள், கட்சியினருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாக முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
English Summary
BJP Annamalai say about Vikravandi ByElection