கம்யூனிஸ்டுகளின் தூண்டுதல்! பெரும் இழப்பை சந்திக்கபோகும் தமிழகம் - முதல்வர் ஸ்டாலினுக்கு அவசர கோரிக்கை!
BJP Narayanan Condemn to CITU Samsung Factory DMK MKStalin
சென்னையை அடுத்த சுங்கவார் சத்திரத்தில் அமைந்துள்ள சாம்ஸங் வீட்டு உபயோக பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தின் தொழிலாளர்கள் ஒரு வாரத்திற்கும் மேலாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக இந்த வேலை நிறுத்தமானது CITU தொழிற்சங்கத்தின் தூண்டுதல் மற்றும் வழிகாட்டுதலின் பேரில் நடைபெற்று வருகிறது. சுமார் 1800 க்கும் அதிகமானோருக்கு வேலைவாய்ப்பு வழங்கியுள்ள இந்த நிறுவனத்தின் பணிகளை முடக்கியிருக்கிறது இந்த வேலை நிறுத்தம்.
தொழிற்சங்கத்திற்கு அங்கீகாரம், கூடுதல் சம்பளம் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலைநிறுத்தம் செய்யப்பட்டாலும், பண்டிகை காலத்தில் இந்த வேலை நிறுத்தம் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது.
இந்தியாவின் சாம்ஸங் நிறுவனத்தின் 30% வருவாயை இந்த தொழிற்சாலை ஈட்டுகிறது. ஒரு வாரமாகியும் தமிழக அரசினால் இந்த வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரமுடியாதது மாநில அரசின் மெத்தனத்தை, அலட்சிய போக்கை, நிர்வாகமின்மையை உணர்த்துவதாக, பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "வெளிநாட்டு பெரு நிறுவனங்கள் இந்திய சட்ட திட்டங்களை மதித்து, அதன்படியே தங்களின் இயக்கத்தை செயல்படுத்த வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
ஆனால், தொழிற்சங்கங்கள் என்ற போர்வையில் உற்பத்திக்கு பாதிப்பு ஏற்படுத்தும் முயற்சியில் CITU போன்ற தொழிற்சங்கங்கள் ஈடுபடுவது வெளிநாடுகளின் நிறுவனங்கள் நம் நாட்டில் முதலீடு செய்வதை பெருமளவில் தடுக்கும். குறிப்பாக, உற்பத்தி மாநிலமான தமிழகத்தில் இந்த வேலைநிறுத்தம் மிக கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்.
வெளிநாடுகளுக்கு சென்று பல்லாயிரம் கோடி முதலீடுகளை ஈர்த்து வருவதாக சொல்லிக்கொள்ளும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த விவகாரத்தில் தலையிட்டு கம்யூனிஸ்டுகளின் தூண்டுதலை நிறுத்த முயற்சிக்க வேண்டும்.
தொழிலாளர்களின் கோரிக்கைகளில் நியாயம் இருக்குமேயானால், சாம்ஸங் நிறுவனத்திடம் உடனடியாக பேசி ஆவன செய்து வேலை நிறுத்தத்தை திரும்பப் பெற வைக்க வேண்டும்.
இல்லையேல், வெளிநாட்டு நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்ய தயங்குவார்கள் என்பதையும் வேலைவாய்ப்புகளை தமிழகம் இழக்க நேரிடும் என்பதையும் உணர்ந்து செயல்பட வேண்டும்" என்று நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
English Summary
BJP Narayanan Condemn to CITU Samsung Factory DMK MKStalin