போலி திராவிட மாடல், பொய் தம்பட்டம் - முக ஸ்டாலினுக்கு எல்.முருகன் அடுக்கடுக்கான கேள்வி!
Central Minister L Murugan Question to CM MKStalin
தமிழகத்தில் ஜாதிய வன்கொடுமை தலைவிரித்து ஆடும் "போலி திராவிட மாடல்" ஆட்சியில், இத்தனை அவலங்களை வைத்துக் கொண்டு ஆதிதிராவிட மக்கள் நலன் காப்பதில் தமிழகம் முன்னணி என பொய் தம்பட்டம் அடிப்பதா..? என்று தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்த அவரின் அறிக்கையில், இந்தியாவிலேயே ஆதிதிராவிட மக்களின் நலன் காப்பதில், தமிழ்நாடு முன்னணி மாநிலமாக விளங்குவதாக கூறி தமிழக அரசு சார்பில் ஒரு மாய்மால அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், போலி திராவிட மாடல் திமுக அரசுக்கும் பட்டியலின மக்கள் மீது திடீர் பாசம் பொங்கி வழியத் தொடங்கி இருக்கிறதோ என்ற கேள்வியை எழுப்புகிறது. மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அடுத்தடுத்து நடந்து வரும் சம்பவங்களால் திமுக அரசு தமிழக மக்களின் கடும் கோபத்திற்கு ஆளாகியுள்ளது.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்த 65-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவமும், உயிரிழந்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதும் தமிழகத்தில் மட்டுமின்றி தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக, தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் பரவியுள்ள போதைப்பொருட்களின் புழக்கம் வெட்ட வெளிச்சமாகி உள்ளதாக எல். முருகன் தெரிவித்துள்ளார்.
மேலும், பட்டிலயின மக்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமையைத் தடுக்க திராணியில்லாமல், கைகட்டி வேடிக்கை பார்ப்பது மட்டுமல்லாமல் பல இடங்களில் இதனை திமுகவினரே தூண்டி விடும் கொடூரமும் அரங்கேறி வருகிறது.
"பள்ளி மாணவர் விடுதிகளுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் உணவுப்படி, 1400 ரூபாயாக உயர்த்தப்படுவதாகவும், கல்லூரி மாணவ, மாணவியர் விடுதிகளில் தங்கி பயின்று வருவோருக்கு வழங்கப்படும் உணவுப்படி 1500 ரூபாயாக உயர்த்தப்படுவதாகவும்" அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை பார்த்து பட்டியலின மக்கள் சிரிக்கிறார்கள். தமிழகத்தில் ஆதிதிராவிட, பழங்குடியின மாணவர்களுக்கான விடுதிகள் என்ன கதியில் இருக்கிறது என்பதை மு.க.ஸ்டாலின் அறிவாரா? அந்த விடுதிகளை இதுவரை அவர் சென்று பார்த்தது உண்டா?
இதுபோன்ற ஏதாவது ஒரு விடுதிக்கு நேரில் சென்று பார்த்து இருந்தால் அவருக்குத் தெரியும். மனிதர்கள் வசிக்க எந்தத் தகுதியும் இல்லாத சூழலில் தான் தமிழகத்தில் ஆதிதிராவிட, பழங்குடியின மாணவர் விடுதிகள் இருக்கின்றன. அங்கு வழங்கப்படும் உணவின் தரம் எவ்வளவு மோசமாக இருக்கிறது என்பதெல்லாம் அதைச் சாப்பிடும் மாணவர்களுக்குத் தான் தெரியும்.
மாதத்திற்கு 1500 ரூபாய் கொடுப்பதையே சாதனையாக பீற்றிக் கொள்ளலாமா? இதை ஒரு சாதனையாக அறிவிக்க, ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக வெட்கப்பட வேண்டும். பட்டியலின சமூக மக்களை இந்த நிலையில் வைத்துக் கொண்டு, ஆதிதிராவிட மக்கள் நலன் காப்பதில் தமிழகம் முன்னணியில் இருப்பதாக திமுக அரசு சுய தம்பட்டம் அடிப்பது அவமானம் இல்லையா? என்றும் எல் முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், பட்டியலின மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க முடியாத அவலத்தை வைத்துக் கொண்டு, இது தான் திராவிட மாடல் என பெருமை பேசும் துணிவு, மனசாட்சியற்ற திமுகவினருக்கு மட்டுமே இருக்க முடியும். திமுக ஆட்சிக்கு வந்த 2021-ம் ஆண்டுக்குப் பிறகு, கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் தமிழகத்தில் பட்டியலின மக்களுக்கு எதிராக, ஆண்டு ஒன்றுக்கு 2000-க்கும் மேற்பட்ட வன்கொடுமைச் சம்பவங்கள் நடந்திருப்பதாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
தமிழகத்தில் இருக்கின்ற 386 கிராம ஊராட்சிகளில், பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் ஊராட்சித் தலைவர்களாக இருக்கக் கூடிய 22 கிராம ஊராட்சி அலுவலகங்களில், அவர்கள் அமர நாற்காலி கூட வழங்கப்படவில்லை என, திமுகவின் கூட்டணியில் இருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் துணை அமைப்பு ஆய்வு நடத்தி அறிவித்துள்ளது. இவை எல்லாமல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தெரியுமா? என்றும் மத்திய உன்னை அமைச்சர் எல்.முறுகல் கேள்வி எழுப்பியுள்ளார்.
English Summary
Central Minister L Murugan Question to CM MKStalin