கணவர் அடிமரம்.. மனைவி ஆணிவேர்.. 'குடும்பம்' எனும் மரத்தைக் காக்க அகம்பாவத்தை கைவிடுங்கள் - ஐகோர்ட் அறிவுரை
Chennai hing Court advices to Forsake the selfishness to protect tree of family
சென்னை ஐகோர்ட்டில் கணவரை பிரிந்துவாழும் பெண் ஒருவர், ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துசென்ற தன் கணவர், தனது 4 வயது குழந்தையை கடத்திச் சென்று சட்டவிரோதமாக வைத்துள்ளார் என்றும், அவரிடம் இருந்து குழந்தையை மீட்டு தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கை நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், சி.சரவணன் ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்சு விசாரணை மேற்கொண்டது. அதில், கணவரை பிரியும்முன் மனுதாரர் தனது குழந்தையை வேண்டுமென்றே கணவரிடம் விட்டுச் சென்றுள்ளார் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், குழந்தை கடந்த 2020-ம் ஆண்டு முதல் தந்தையிடம் வளர்ந்துவருகிறது. எனவே, குழந்தை சட்டவிரோத காவலில் தந்தையிடம் இருப்பதாக கருத முடியாது. இந்த ஆட்கொணர்வு வழக்கை தள்ளுபடி செய்கிறோம் என்று தீர்ப்பளித்தனர்.
மேலும், அகம்பாவமும், அன்பும் ஒருசேர பயணிக்க முடியாது. அகம்பாவம் உறவைக் கெடுத்துவிடும். அகம்பாவத்தையும், சகிப்புத்தன்மையின்மையையும் காலணிகளை போல வீட்டுக்கு வெளியில் விட்டுச்செல்ல வேண்டும்.
இல்லாவிட்டால் தம்பதியருக்கு மட்டுமல்லாமல், அவர்களது குழந்தைக்கும் பாதிப்பு ஏற்படும். மனைவி என்பவர் குடும்பத்தின் ஆணிவேர் போன்றவர். கணவர் அடிமரம். மற்ற உறுப்பினர்கள் கிளைகள். வேர் சேதமடைந்துவிட்டால் மொத்த குடும்பத்துக்கும் பாதிப்பு ஏற்படும்.
எனவே கணவன்-மனைவி தங்கள் குழந்தைகளின் நலனைக் கருதி அகம்பாவங்களை விட்டொழிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
English Summary
Chennai hing Court advices to Forsake the selfishness to protect tree of family