ஆருத்ரா மோசடி வழக்கு.. "நடிகர் ஆர்.கே சுரேஷின் கோரிக்கை நிராகரிப்பு''... உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
ChennaiHC refuses to stay notice to RKSuresh on Arudhra issue
சென்னை அமைந்தகரையை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த ஆருத்ரா கோல்ட் ட்ரேட் நிறுவனம் தமிழக முழுவதும் அதிக வட்டி தருவதாக கூறி முதலீட்டாளர்களிடமிருந்து ரூ. 2,438 கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஆருத்ரா நிறுவனத்தின் இயக்குனர்கள் உட்பட 21 பேர் மீது வழக்கு பதிவு செய்தது.
இந்த வழக்கில் கைதான நடிகர் ரூசோ என்பவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் நடிகரும், தயாரிப்பாளரும் பாஜக ஓபிசி பிரிவு துணைத் தலைவருமான ஆர்.கே சுரேஷ் ஆருத்ரா நிறுவன மோசடியில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அதன் அடிப்படையில் உரிய ஆவணங்களுடன் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முன்னிலையில் ஆஜராகும் படி நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இந்த நோட்டீசை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆர்.கே சுரேஷ் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் பட தயாரிப்பு தொடர்பாக ரூசோ தம்மை அனுப்பியதாகவும், அது தொடர்பாக மட்டுமே பண பரிவர்த்தனை நடந்ததாகவும் தெரிவித்துள்ள சுரேஷ். தற்பொழுது தனது மனைவி மற்றும் குழந்தையை கவனித்துக் கொள்வதற்காக வெளிநாட்டில் இருப்பதால் விசாரணைக்கு நேரில் ஆஜராக இயலாது என தெரிவித்திருந்தார்.
இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சந்திரசேகரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்பொழுது ஆர்.கே சுரேஷ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையாகவே இந்த விவகாரத்தில் ஆர் கே சுரேஷ் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகவும், ஆருத்ரா நிறுவனத்திற்கும் சுரேஷுக்கும் எந்த தொடர்பும் இல்லை என வாதிட்டார்.
அப்போது நீதிபதி "ஆர்.கே சுரேஷுக்கு அனுப்பப்பட்டுள்ள சம்மனில் ஆவணங்களுடன் ஆஜராகும்படி அனுப்பப்பட்டுள்ளது. எந்த மாதிரியான ஆவணங்கள் என்ற விவரம் இடம் பெறவில்லை. எனவே இந்த சம்மனை ரத்து செய்கிறேன். வேண்டுமானால் பொருளாதாரப் பிரிவு போலீசார் சார்பில் புதிய சமன் அனுப்பலாம்" என தெரிவித்தார்.
அப்பொழுது குறுக்கிட்ட காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் "இந்த சம்மனை ரத்து செய்ய வேண்டாம். இந்த சமன் குறித்து விளக்கம் அளிக்க கால அவகாசம் வேண்டும்" என வாதிட்டார். அதற்கு ஆர் கே சுரேஷ் தரப்பு வழக்கறிஞர் "காவல்துறையினர் பதில் அளிக்கும் வரை இந்த சம்மன் மீது தடை விதிக்க வேண்டும்" என கோரிக்கை வைத்ததை நிராகரித்த நீதிபதி காவல்துறையினருக்கு கால அவகாசம் வழங்கி இந்த வழக்கின் விசாரணையை வரும் ஏப்ரல் 28ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
English Summary
ChennaiHC refuses to stay notice to RKSuresh on Arudhra issue