தூத்துக்குடி செல்கிறார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்..!
chief minister mk stalin going to thoothukudi
தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று தூத்துக்குடி செல்கிறார். இதற்காக மதியம் சென்னையில் இருந்து விமானத்தில் புறப்பட்டு தூத்துக்குடி விமான நிலையத்துக்கு வருகிறார். மாலை 4.30 மணிக்கு தூத்துக்குடி- திருச்செந்தூர் ரோடு சத்யாநகர் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட நியோ டைடல் பார்க்கை திறந்து வைக்கிறார்.
இந்த மினி டைடல் பார்க்கில் வாகனம் நிறுத்துமிடம், பல்வகை உணவுக்கூடம், உடற்பயிற்சிக்கூடம், கலையரங்கம், தடையற்ற மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளன. இதன் மூலம் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் மாலை 5 மணிக்கு மாணிக்கம் மஹாலில் தூத்துக்குடி வடக்கு, தெற்கு மாவட்ட கழக நிர்வாகிகளுடன் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசுகிறார். நிகழ்ச்சி முடிந்ததும் இரவில் தூத்துக்குடி சத்யா ரிசார்ட்சில் தங்கி ஓய்வெடுக்கிறார்.
நாளை காலை 9 மணிக்கு தூத்துக்குடி காமராஜ் கல்லூரிக்கு செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு தமிழக அரசின் புதுமைப்பெண் விரிவாக்க திட்டத்தை தொடங்கி வைக்கிறார். இந்த திட்டம் வறுமை காரணமாக உயர்கல்வியில் சேர இயலாத மாணவிகளுக்கு உயர்கல்வி வாய்ப்பை தருவதோடு, பெற்றோரின் பொருளாதார சுமையை குறைக்கிறது.
முதலமைச்சரின் வருகையை முன்னிட்டு தூத்துக்குடியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாநகரின் பிரதான சாலைகளின் இருபுறமும் தி.மு.க. கொடிகள் பறக்க விடப்பட்டுள்ளன.
English Summary
chief minister mk stalin going to thoothukudi