நெல்லை செல்லும் முதல்வர் - பாதுகாப்பு பணி தீவிரம்.!
chief minister mk stalin going to tirunelveli
தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பல்வேறு மாவட்டங்களில் களஆய்வுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், மு.க ஸ்டாலின் திருநெல்வேலிக்கு இரண்டு நாட்கள் களப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அதன் படி இன்று பிற்பகல் கங்கைகொண்டான் சிப்காட் செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு மூன்று ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் ரூ.4,400 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள டாடா பவர் சோலார் நிறுவனத்தின் உற்பத்தியை தொடங்கி வைக்கிறார்.
தொடர்ந்து விக்ரம் சோலார் நிறுவனத்தின் கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். சிப்காட்டில் அமைக்கப்பட்டுள்ள மெகா உணவு பூங்காவையும் திறந்து வைக்கிறார். பின்னர் அங்கிருந்து நெல்லை வண்ணார்பேட்டை அரசினர் சுற்றுலா மாளிகைக்கு வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாலை ஐந்து மணியளவில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.40 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள பாளையங்கோட்டை மகாத்மா காந்தி தினசரி சந்தை, காய்கனி சந்தை மற்றும் புதிய வணிக வளாகத்தை திறந்து வைக்கிறார்.
மேலும், பாளையங்கோட்டை நேருஜி கலையரங்கில் தி.மு.க. முக்கிய நிர்வாகிகளை சந்தித்து பேசுகிறார். பாளையங்கோட்டை நூற்றாண்டு மண்டபத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசுகிறார். இதில் மாற்றுக் கட்சியில் இருந்து விலகி பலர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைகிறார்கள். இரவில் நெல்லை வண்ணார்பேட்டை அரசினர் சுற்றுலா மாளிகையில் ஓய்வெடுக்கிறார்.
நாளை காலை 8 மணிக்கு மாஞ்சோலை தேயிலைத்தோட்ட தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளை சந்தித்து பேசுகிறார். காலை 9.30 மணி அளவில் சுற்றுலா மாளிகையில் இருந்து புறப்படும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாளையங்கோட்டையில் உள்ள நெல்லை அரசு பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரூ.78 கோடி மதிப்பில் நவீன வசதிகளுடன் கூடுதலாக கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடத்தை திறந்து வைக்கிறார்.
பின்னர் காணொலி காட்சி வாயிலாக ரூ.1,061 கோடியில் தாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு நதிநீர் இணைப்பு வெள்ள நீர் கால்வாய் திட்டம் உள்ளிட்ட முடிவுற்ற 24 திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார். ரூ.180 கோடியில் தாழையூத்து-கொங்கந்தான்பாறை விலக்கு வரை நெல்லை மாநகருக்கான மேற்கு புறவழிச்சாலை பகுதி-1 திட்டப்பணிகள் உள்ளிட்ட 20 பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
தொடர்ந்து 75 ஆயிரத்து 84 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். இந்த 2 நாள் கள ஆய்வில், சுமார் ரூ.9,368 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். முதலமைச்சரின் வருகையை முன்னிட்டு
போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
English Summary
chief minister mk stalin going to tirunelveli