40 தமிழக எம்பிக்கள் சொல்லியும் ஒன்னும் நடக்கலையே... வேதனையில் மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின்!
CM MKStalin letter to Central Minister for Tamil Fisher man issue aug 24
இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட வலியுறுத்தி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் அவர்களுக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 35 மீனவர்கள், IND-TN-10- MO-1825, IND-TN-10-MO-1826, IND-TN-10-MO-1458 LmmL IND-TN-10-MO- 1487 ஆகிய பதிவு எண்களைக் கொண்ட அவர்களது நான்கு மோட்டார் பொருத்தப்பட்ட நாட்டுப் படகுகளில் மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில், நேற்று (9.8.2024) இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் ஆழ்ந்த வேதனையும் கவலை அளிப்பதாகவும் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் இரண்டு மீனவர்கள் உயிரிழந்த நிலையில், மீனவர் பிரச்சனை தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சர் அவர்களை தமிழ்நாட்டிலிருந்து சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மீனவ சங்கப் பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர் சந்தித்ததை நினைவுகூர்ந்துள்ள முதலமைச்சர், அதற்குப் பின்னரும் குறிப்பிடத்தக்க நிவாரணமோ தீர்வோ ஏற்படவில்லை என்று வருத்தத்தோடு குறிப்பிட்டுள்ளார்.
நமது மீனவர்கள் தொடர்ந்து சிறைபிடிக்கப்படும் சம்பவங்களால், மீனவக் குடும்பங்கள் மிகுந்த துயரங்களுக்கு ஆளாவதோடு, கடலோர மீனவ சமுதாயத்தினரிடையே அச்ச உணர்வும், அவர்களது வாழ்க்கையில் நிச்சயமற்ற தன்மையும் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், இதுபோன்ற கைது நடவடிக்கைகள் மீனவ குடும்பங்களின் மன நம்பிக்கையை குலைத்து, பெருத்த நிதி சுமையை ஏற்படுத்தி, அவர்களது பாரம்பரிய மீன்பிடித் தொழிலை கடினமாக்கி உள்ளதாகவும் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை உடனடியாக விடுவிப்பதை உறுதி செய்திடவும், இதுபோன்ற கைது சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க நிரந்தரத் தீர்வை ஏற்படுத்திடவும் வலுவான தூதரக நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டியது இன்றியமையாததாகும் எனக் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், கடலோர மீனவ சமுதாயத்தினரின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்து, கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடி படகுகளையும் விடுவித்து, தாயகத்திற்கு அழைத்து வருவதை உறுதி செய்திட வேண்டும் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.
English Summary
CM MKStalin letter to Central Minister for Tamil Fisher man issue aug 24