இங்கு அரசியல் பேச வேண்டாம்! பாஜக நிர்வாகிகளுடன் போசியா கூட்டமைப்பினர் வாக்குவாதம்!
Coimbatore industrialist argued with BJP leaders
மின் கட்டண உயர்வை திரும்ப பெற கோரி கோவை சிறு குறு தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பான போசியா சார்பில் கடையடைப்பு மற்றும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. அதன்படி உச்சபட்ச பயன்பாட்டு நேரங்களில் மின் கட்டணத்தை அரசு முழுமையாக குறைக்க வேண்டும் என வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. உச்சபட்ச பயன்பாட்டு நேரங்களில் முன்பு இருந்த அளவுக்கு மின் கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
கோவை மாவட்டம் டாடாபாத் பகுதியில் சிறு குறு தொழில் நிறுவனங்களை கூட்டமைப்பினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களின் போராட்டத்திற்கு கம்யூனிஸ்ட், பாஜக உட்பட சில அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்தன. அதன்படி தமிழக பாஜக துணை தலைவர் கனகசபாபதி, தொழில்துறை பிரிவு மாநில துணைத்தலைவர் செல்வகுமார், கோவை மாநகர் மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி ஆகியோர் சென்று பாஜக சார்பில் ஆதரவை தெரிவித்தனர்.
அந்த உண்ணாவிரத போராட்டத்தில் அரசியல் ரீதியான கருத்துக்களை கனகசபாபதி பேச முற்பட்டார். அதற்கு தொழில் அமைப்பினர் இங்கு அரசியல் பேச வேண்டாம் என கூறிவிட்டனர். பிறகு செல்வகுமார் பேசும்போது தமிழ்நாட்டுடன் ஒப்பிட்டு குஜராத் மாநிலத்தை புகழ்ந்தார். அப்பொழுது பேசிய அவர் முதலில் மாநில அரசிடம் உங்கள் கோரிக்கைகளை கேளுங்கள் அதன் பிறகு மத்திய அரசை கேளுங்கள் என பேசி இருந்தார்.
இதனால் கோபமடைந்த தொழில் சங்க கூட்டமைப்பினர் அரசியல் பற்றி பேச வேண்டாம் என கூறி பாஜகவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதற்கு பாஜகவினர் "நாங்கள் இங்கு அரசியல் பேச வரவில்லை. தொழில் துறையினர் பிரச்சினை பேசதான் வந்துள்ளோம்" எனக் கூறி போராட்டம் நடைபெற்ற இடத்தில் இருந்து புறப்பட்டு சென்றனர். இதன் காரணமாக போராட்டம் நடந்த இடத்தில் சிறிது நேரம் பரபரப்பு தொற்றிக் கொண்டது.
English Summary
Coimbatore industrialist argued with BJP leaders