வீடு வாங்கி தருவதாக பணமோசடி - புகாரில் சிக்கிய காங்கிரஸ் நிர்வாகி.!
congrass councilar money fraud in coimbatore for house buy
கோயம்புத்தூர் மாவட்டம் சின்னியம்பாளையம் ஆசிரியர் காலனி பகுதியை சேர்ந்தவர்கள் பாலசுப்பிரமணியன்- லதா தம்பதியினர். இவர்களுக்கு சொந்த வீடு இல்லாததால், செல்வபுரம் குடுசைமாற்று வாரியத்தில் வீடு வேண்டி தெற்கு வட்டாட்சியர் வருவாய் அலுவலகத்தில் தற்காலிக பணியாளராக பணிபுரியும் பூசாரிபாளையம் பகுதியை சேர்ந்த தம்பு (எ) திருமகன் என்பவரை அணுகியுள்ளனர்.
அப்போது அவர் வீடு தர 1,20,000 ரூபாய் கொடுக்க வேண்டும் என்றும், மாநகராட்சி 74-வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலர் சங்கர் மூலம் வீடு ஒதுக்கீடு செய்து பெற்றுத் தருவதாக கூறியுள்ளார். இதனை உண்மை என்று நம்பிய தம்பதியினர் கடந்த 2022ம் ஆண்டு பூசாரிபாளையத்தில் உள்ள கவுன்சிலர் அலுவலகத்தில் வைத்து திருமகன் முன்னிலையில் கவுன்சிலர் சங்கரிடம் 1,20,000 ரூபாய் கொடுத்துள்ளனர்.
ஆனால், நீண்ட நாட்களாகியும் வீடு ஒதுக்கீடு செய்து தராததால் கவுன்சிலர் சங்கரிடமும் திருமகனிடமும் கேட்ட பொழுது கவுன்சிலர் சங்கர் அவரது லெட்டர் பேடில் சட்டமன்ற உறுப்பினராக உள்ள செல்வப்பெருந்தகைக்கு பணிந்துரை கடிதம் எழுதிய நகலையும் செல்வப்பெருந்தகை அமைச்சர் அன்பரசனிடம் வீடு கேட்டு பரிந்துரை செய்த நகலையும் கொடுத்துள்ளனர்.
இதைப்பார்த்த பின்னர் வீடு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தம்பதியினர் இருந்து வந்த நிலையில், இன்று வரை வீட்டையும் ஒதுக்கீடு செய்து தராமல் பணத்தையும் திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றி வருவதுடன் தங்களை ஆள் வைத்து மிரட்டுவதாக கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் லதா புகார் அளித்துள்ளார்.
மேலும் தாங்கள் கொடுத்த பணத்தை திரும்ப பெற்று தருமாறும், தங்களையும் குடும்பத்தையும் மிரட்டுவதால் மிகுந்த அச்சமாக உள்ளதாகவும் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். வீடு வாங்கி தருவதாக காங்கிரஸ் கவுன்சிலர் பணமோசடி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
congrass councilar money fraud in coimbatore for house buy