இரட்டை அடுக்கு நீட் வேஸ்ட்! நீட் தேர்வு ரத்து மட்டுமே நிரந்தரத் தீர்வு - மருத்துவர் அன்புமணி! - Seithipunal
Seithipunal


இரட்டை அடுக்கு நீட் ஊரக மாணவர்களுக்கு இன்னும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும்: நீட் தேர்வு ரத்து மட்டுமே நிரந்தரத் தீர்வு என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.

மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்காக நடப்பாண்டில் நடத்தப்பட்ட நீட் தேர்வில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் நாடு முழுவதும் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், முறைகேடுகளைத்  தடுப்பதற்காக இரட்டை அடுக்கு நீட் தேர்வை இரு அமைப்புகளின் மூலம் நடத்த மத்திய அரசு திட்டம் வகுத்திருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. இரட்டை அடுக்கு நீட் தேர்வை நடத்தும் முடிவு ஒரு பிழையை மறைப்பதற்காக இன்னொரு பெரும் பிழையை செய்வதற்கு ஒப்பானதாகும் என பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,



 எம்.பி.பி.எஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த மே 5&ஆம் நாள் நடைபெற்றது. அதில் வினாத்தாள் கசிவு தொடங்கி, குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது வரை ஏராளமான முறைகேடுகள் நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. நீட் தேர்வை ரத்து செய்து விட்டு மீண்டும் புதிய நீட் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்ற பெரும்பான்மையான மாணவர்கள் வலியுறுத்தியுள்ள நிலையில், அது குறித்து விசாரணை நடத்தி வரும் உச்சநீதிமன்றம், வெகுவிரைவில் தீர்ப்பளிக்கவுள்ளது. இத்தகைய சூழலில் தான் இரட்டை அடுக்கு நீட் தேர்வை, இரு தேர்வு அமைப்புகள் மூலம் நடத்துவது பற்றி மத்திய அரசு ஆய்வு செய்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்திய தொழில்நுட்பக் கழகங்களான ஐ.ஐ.டி மாணவர் சேர்க்கைக்காக நடத்தபடும் கூட்டு நுழைவுத்தேர்வு  போன்று நீட் தேர்வையும் முதனிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு ஆகிய இரு அடுக்குகளில் நடத்த மத்திய  அரசு திட்டமிட்டிருக்கிறது. முதனிலைத் தேர்வில் பங்கேற்பவர்களில் இருந்து, நாடு முழுவதும் உள்ள மருத்துவ இடங்களின் எண்ணிக்கையை விட 4 அல்லது 5 மடங்கு மாணவர்களை தேர்ந்தெடுத்து முதன்மைத்  தேர்வு நடத்துவது தான் மத்திய அரசின் திட்டம் ஆகும். இவற்றில் முதனிலைத் தேர்வை ஓர் அமைப்பின் மூலமாகவும், முதன்மைத் தேர்வை இன்னொரு அமைப்பின் மூலமாகவும் நடத்துவது குறித்தும் அரசு ஆய்வு செய்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.



மத்திய அரசின் இந்தத் திட்டம் எதிர்பார்க்கும் பயன்களைத் தராது. இரட்டை அடுக்கு நீட் தேர்வை அறிமுகம் செய்வதன் மூலம், நீட் தேர்வில் நடைபெறும் முறைகேடுகளைத் தடுக்க முடியாது. மேலும்,  நீட் தேர்வை இரு அடுக்குகள் கொண்டதாக மாற்றுவதன் மூலம் நீட் தேர்வு மேலும் கடுமையானதாக மாற்றப்படும். அதற்காக மாணவர்கள் கூடுதல் பயிற்சி எடுக்க வேண்டிய நிலை உருவாகும். அதனால், நீட் பயிற்சி வகுப்பு நடத்தும் நிறுவனங்கள் தான் செழிக்குமே தவிர மாணவர்களுக்கு பயன் ஏற்படாது.

நீட் தேர்வு முறைகேடுகள் தொடர்பான வழக்குகளை விசாரித்து வரும் உச்சநீதிமன்றம் பிறப்பித்த ஆணையின்படி, தேர்வு மையங்கள் வாரியாக நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றின்படி பார்த்தால், இராஜஸ்தான் மாநிலம் கோட்டா, சிகார், ஹரியானா மாநிலம் ரோட்டக், குஜராத் மாநிலம் ராஜ்கோட், கேரள மாநிலம் கோட்டயம் ஆகிய நகரங்களில் மையங்களில் தேர்வெழுதிய மாணவர்கள் தான் அதிக மதிப்பெண் எடுத்துள்ளனர் என்பதும், அங்குள்ள பயிற்சி மையங்கள் தான் மாணவர்களை அதிக மதிப்பெண் எடுக்கச் செய்யும் தொழிற்சாலைகளாக செயல்பட்டு வருகின்றன என்பதும் தெரிய வந்துள்ளது.

இந்த நகரங்களில் உள்ள மையங்களில் தங்களின் பிள்ளைகளைச் சேர்த்து பயிற்சி பெறச் செய்வதற்காக ஒவ்வொரு பெற்றோரும் ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வரை செலவு செய்கின்றனர். இனி வரும் காலங்களில் நீட் இரட்டை அடுக்கு கொண்டதாக மாற்றப்பட்டால் இன்னும் கூடுதலாக பயிற்சி எடுக்க வேண்டியிருக்கும். அதுமட்டுமின்றி, இதுவரை பயிற்சி பெறாமல், சொந்த முயற்சியில் நீட்  தேர்வை எதிர்கொண்டவர்களால் கூட, இனி இரட்டை அடுக்கு நீட்டை பயிற்சி இல்லாமல் எழுத முடியாது. அதனால், அனைத்து மாணவர்களும் நீட் பயிற்சி மையங்களை நோக்கி படையெடுக்க வேண்டியிருக்கும்.



நீட் தேர்வை பாட்டாளி மக்கள் கட்சி கடுமையாக எதிர்ப்பதற்கு காரணமே அது கிராமப்புற, ஏழை மாணவர்களுக்கு எதிரானது என்பதால் தான். கடந்த சில ஆண்டுகளில் நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவப் படிப்பில் சேர்ந்த மாணவர்களின் பின்னணியை ஆய்வு செய்தால், அவர்களில் 85%க்கும் அதிகமானவர்கள் குறைந்தது 2 அல்லது 3 முறை நீட் தேர்வு எழுதியவர்களாக உள்ளனர். எத்தனை முறை மாணவர்கள் நீட் தேர்வு எழுதுகிறார்களோ, அதை விட அதிக ஆண்டுகள் அவர்களுக்கு நீட் பயிற்சி பெற்றிருக்கின்றனர். இவை எதுவும் ஏழை மாணவர்களால் சாத்தியமாகாது, பயிற்சி இல்லாமல் நீட் தேர்வில் தேர்ச்சி பெறவும் முடியாது என்பதால் தான் அனைவருக்கும் சமவாய்ப்பு வழங்கும் வகையில், 12&ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளின் மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்று பா.ம.க. வலியுறுத்தி வருகிறது. அத்தகைய சமவாய்ப்பை ஏற்படுத்தி தருவதை நோக்கி பயணிக்காமல், இரட்டை அடுக்கு நீட் தேர்வை அறிமுகப்படுத்துவதன் மூலம் ஏழை, கிராமப்புற மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பு வாய்ப்பை முழுமையாக பறிப்பதை நோக்கி பயணிப்பது சமூக அநீதி.

மருத்துவக் கல்வியின் தரத்தை அதிகரிக்கவும், மருத்துவக் கல்வி வணிகமயமாவதை தடுக்கவும் தான் நீட் கொண்டு வரப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், நீட் அறிமுகம் செய்யப்பட்டு 8 ஆண்டுகள் ஆகியும் இந்த இரு நோக்கங்களையும் நீட் நிறைவேற்றவில்லை. எனவே, நீட் தேர்வை ரத்து செய்வது தான் நிரந்தரத் தீர்வாக இருக்குமே தவிர, ஒரு பிழைக்கு மாற்றாக இன்னொரு பிழை என்பதன் அடிப்படையில், ஓரடுக்கு நீட் தேர்வுக்கு பதிலாக இரட்டை அடுக்கு நீட் தேர்வை அறிமுகம் செய்வது சரியல்ல. எனவே, இந்தத் திட்டத்தை கைவிட்டு நீட் தேர்வை ரத்து செய்ய அரசு முன்வர வேண்டும் என்று அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Double tier NEET will affect rural students worse Canceling NEET is only permanent solution Dr Anbumani Ramadoss


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->