வெறும் ரூ.7 தானா? பாமக வைத்த கோரிக்கை! அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்! - Seithipunal
Seithipunal


நெல் கொள்முதல் ஊக்கத்தொகையை குவிண்டாலுக்கு ரூ.7 மட்டும் உயர்த்துவது போதுமானதல்ல என்றும், ஊக்கத்தொகையாக ரூ.500 வழங்க வேண்டும் என்றும், பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் 2023-24 ஆம் ஆண்டுக்கான நெல் கொள்முதல் வழக்கமாகத் தொடங்கும் அக்டோபர் ஒன்றாம் நாளுக்கு பதிலாக செப்டம்பர் ஒன்றாம் நாளே தொடங்கும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது.

காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை அறுவடை முன்கூட்டியே தொடங்கிவிட்ட நிலையில், அந்த நெல்லுக்கு உயர்த்தப்பட்ட விலை கிடைப்பதற்கு வசதியாக நெல் கொள்முதலை செப்டம்பர் மாதமே தொடங்கும்படி பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வந்த நிலையில், அதன்படியே  கொள்முதல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. இதன்மூலம் முன்கூட்டியே அறுவடை முடித்த உழவர்கள் பயனடைவார்கள்.

அதேநேரத்தில் நெல்லுக்கு அறிவிக்கப்பட்டுள்ள கொள்முதல் விலை போதுமானதல்ல.  ஒரு குவிண்டால் நெல்லுக்கான குறைந்த அளவு ஆதரவு விலையாக சன்ன ரகத்திற்கு ரூ.2203, சாதாரண ரகத்திற்கு ரூ.2183 என மத்திய அரசு அறிவித்திருக்கிறது. 

அத்துடன் சாதாரண நெல்லுக்கு ரூ82, சன்னரக நெல்லுக்கு ரூ.107 வீதம்  ஊக்கத்தொகை  சேர்த்து சாதாரண நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,265, சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,310 வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது.  

கடந்த ஆண்டு சாதாரண நெல்லுக்கு ரூ 75, சன்னரக நெல்லுக்கு ரூ.100 வீதம்  ஊக்கத்தொகை வழங்கிய தமிழக அரசு, நடப்பாண்டில்  ரூ. 7 மட்டுமே, அதாவது ஒரு கிலோவுக்கு 7 காசு மட்டுமே  உயர்த்தி வழங்கியிருக்கிறது. இது எந்த வகையிலும்  போதுமானது அல்ல.

இந்தியாவில் நெல்லுக்கு கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. அதனால், அரிசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்திருக்கிறது. அதன் காரணமாக உலகம் முழுவதும் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. 

இந்த நிலையை மாற்ற, நெல் சாகுபடியை அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது.  நெல் கொள்முதல் விலையை அதிகரிப்பதன் மூலம் தான் இதை சாதிக்க முடியும். ஆனால், கிலோவுக்கு 7 காசு அளவுக்கு ஊக்கத்தொகையை உயர்த்துவதன் மூலம் நெல் சாகுபடியை எவ்வாறு அதிகரிக்க முடியும்?

ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.3000 கொள்முதல் விலை வழங்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக உழவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.  

ஒரு குவிண்டால் நெல்லை உற்பத்தி செய்ய ரூ.2000 செலவு ஆவதாக கோவை வேளாண் பல்கலைக்கழகம் மதிப்பீடு செய்திருக்கிறது. 

அத்துடன் 50%, அதாவது ரூ.1000 லாபம் சேர்த்து வழங்கினால் கூட, குவிண்டாலுக்கு ரூ.3000 கொள்முதல் விலையாக வழங்க வேண்டும். மத்திய  அரசு ஒரு குவிண்டால் நெல்லுக்கு கொள்முதல் விலையாக  ரூ.2203 மட்டுமே அறிவித்துள்ள நிலையில், மீதமுள்ள 797 ரூபாயை தமிழக அரசு ஊக்கத்தொகையாக வழங்க வேண்டும். 

அவ்வளவு தொகை வழங்க வாய்ப்பில்லை என்றால் குறைந்த அளவு குவிண்டாலுக்கு 500 ரூபாயாவது  ஊக்கத் தொகையாக வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்" என்று அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Anbumani Ramadoss Say About Paddy Issue 29082023


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->