மனித நேயமில்லாத, மன்னிக்க முடியாத குற்றம் - டாக்டர் இராமதாஸ் பரபாப்பு அறிக்கை!
Dr Ramadoss condemn to Karanataka Govt And TNGovt cauvery issue
காவிரியில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறப்பது நிறுத்தம்: உச்சநீதிமன்றத்தை அணுகி இடைக்காலத் தீர்ப்பையாவது பெற வேண்டும் என்று, தமிழக அரசை பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்த அவரின் அறிக்கையில், "கர்நாடகத்தில் கிருஷ்ணராஜ சாகர், கபினி ஆகிய அணைகளில் இருந்து தமிழ்நாட்டுக்கு காவிரியில் திறக்கப்பட்டு வந்த தண்ணீரை கர்நாடக அரசு நேற்றுடன் நிறுத்தி விட்டது.
காவிரி பாசன மாவட்டங்களில் கருகும் குறுவைப் பயிர்களைக் காக்க வினாடிக்கு 24,000 கன அடி தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு ஆணையிட வேண்டும் என்று கோரி தமிழக அரசு தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
தமிழ்நாட்டிற்கு செப்டம்பர் 12-ஆம் நாள் வரை வினாடிக்கு 5000 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று காவிரி நீர் மேலாண்மை ஆணையம் ஆணையிட்டிருக்கிறது. ஆனால், இவை எதையுமே மதிக்காமல் தமிழ்நாட்டிற்கு திறக்கப்பட்டு வந்த தண்ணீரை கர்நாடக அரசு நிறுத்தியிருப்பது கண்டிக்கத்தக்கது.
காவிரி பாசன மாவட்டங்களில் கருகும் குறுவைப் பயிர்களைக் காப்பாற்ற அடுத்த 20 நாட்களுக்கு குறைந்தது ஒரு டி.எம்.சி வீதம் 20 டி.எம்.சியாவது தண்ணீர் தேவை.
கர்நாடக அணைகளில் 64 டி.எம்.சி தண்ணீர் இருக்கும் நிலையில், அம்மாநில அரசு நினைத்தால் தமிழகத்திற்கு தண்ணீர் வழங்கி குறுவை பயிர்களைக் காப்பாற்ற முடியும்.
ஆனால், உள்ளூர் அரசியலுக்கு அஞ்சியும், தூண்டிவிடப்பட்டு நடக்கும் போராட்டத்திற்கு பயந்தும், சிறிதும் மனித நேயமின்றி தமிழகத்திற்கு திறக்கப்பட்டு வந்த தண்ணீரை கர்நாடக அரசு நிறுத்தியிருப்பது மன்னிக்க முடியாத குற்றம் ஆகும்.
கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் வராவிட்டால் காவிரி பாசன மாவட்டங்களில் கருகும் குறுவை பயிர்களைக் காப்பாற்ற முடியாது.
இதை உணர்ந்து கர்நாடக அரசுக்கு அழுத்தம் கொடுத்து தண்ணீர் பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். எதுவுமே செய்யாமல் அமைதி காப்பதால் தமிழ்நாட்டிற்கு எந்த நன்மையும் விளையாது.
காவிரியில் தண்ணீர் திறந்து விட ஆணையிடக் கோரி, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்த வழக்கின் விசாரணை செப்டம்பர் 21-ஆம் நாளுக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.
அதுவரை காத்திருந்தால் குறுவை பருவ நெற்பயிர்கள் முற்றிலுமாக கருகி விடும். எனவே, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை அவசரமாக அணுகி, இந்த வழக்கில் 21-ஆம் தேதி விசாரணை தொடங்கும் வரை, இடைக்கால ஏற்பாடாக வினாடிக்கு 15,000 கன அடி வீதம் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விடுமாறு கர்நாடக அரசுக்கு ஆணையிட வேண்டும் என்று தமிழக அரசு கோரிக்கை விடுக்க வேண்டும்" என்று மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
English Summary
Dr Ramadoss condemn to Karanataka Govt And TNGovt cauvery issue