மருத்துவர் இராமதாஸின் 'தமிழைத் தேடி' விழிப்புணர்வு பயணம் நாளை சென்னையில் தொடக்கம்! - Seithipunal
Seithipunal


பொங்குதமிழ் வளர்ச்சி அறக்கட்டளையின் சார்பில் தமிழ்நாட்டில் தமிழை வளர்த்தெடுப்பதற்கான தேவையை வலியுறுத்தி ’’தமிழைத் தேடி...’’ என்ற தலைப்பில் பொங்குதமிழ் வளர்ச்சி அறக்கட்டளையின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் விழிப்புணர்வு பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.

உலக தாய்மொழி நாளான பிப்ரவரி 21-ஆம் நாள் (நாளை) சென்னையில் தொடங்கும் இந்த பயணம் பிப்ரவரி 28-ஆம் நாள் மதுரையில் நிறைவடையவுள்ளது. 

தமிழைத் தேடி... விழிப்புணர்வு பரப்புரை பயணத்தின் தொடக்கவிழா சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் நாளை (21.02.2023) செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணிக்கு நடைபெறவுள்ளது. 

பொங்குதமிழ் வளர்ச்சி அறக்கட்டளையின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் மற்றும் தமிழறிஞர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளனர்.

 

தமிழைத் தேடி... விழிப்புணர்வு பரப்புரை பயணம் ஏன்? அதன் அவசியம் குறித்து மருத்துவர் இராமதாஸ் விடுத்த செய்திக்குறிப்பு :

உலகின் மூத்த மொழியான தமிழின் இனிமை, பழமை, பெருமைகள், சிறப்புகள் ஆகியவை குறித்து மகிழ்ச்சி அடைய ஏராளமான செய்திகள் உள்ளன. ஆனால், தமிழ்நாட்டில் இன்று தமிழின் இருப்பு எவ்வாறு உள்ளது? என்பதை நினைக்கும் போது தான் பெரும் கவலையும், வருத்தமும் வாட்டுகின்றன.

தமிழ்நாட்டில் ‘எங்கும் தமிழ்... எதிலும் தமிழ்’ என்பது தான் தமிழறிஞர்கள் மற்றும் தமிழ் உணர்வாளர்களின் நிலைப்பாடும், எதிர்பார்ப்பும் ஆகும். ஆனால், தமிழ்நாட்டில் ‘எங்கே தமிழ்?’ என்பது தான் எதார்த்தம். தமிழில் பிறமொழிச் சொற்களின் கலப்பு, வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகள் பிற மொழிகளில் எழுதப்படுதல், அரசு நிர்வாகத்திலும், கல்வி நிறுவனங்களிலும் தமிழுக்கு உரிய இடம் மறுக்கப்படுவது போன்றவை காலம் காலமாகவே தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. ஆனால், அனைத்து இடங்களிலும் தமிழை நிலை நிறுத்த சட்டங்கள் இயற்றியும் கூட நிலைமை மாறாதது வலியை ஏற்படுத்துகிறது.

1. தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் தமிழைக் கட்டாயப்பாடமாக்க சட்டம் இயற்றி 16 ஆண்டுகள் ஆகியும் கூட தமிழ் இன்னும் கட்டாயப் பாடமாக இல்லை.

2. தமிழ்நாடு மாநில பாடத்திட்டம் தவிர பிற பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகளிலும் தமிழைக் கட்டாயப்பாடமாக்க வேண்டும் என்று 18.09.2014-ஆம் நாளில் அரசாணை பிறப்பிக்கப்பட்டு    8 ஆண்டுகள் நிறைவடைந்தும் அந்த பள்ளிகளிலும் இன்னும் தமிழ் இல்லை.

3. அனைத்துப் பள்ளிகளிலும் ஐந்தாம் வகுப்பு வரை தமிழ் தான் கட்டாயப் பயிற்றுமொழி என்று 23 ஆண்டுகளுக்கு முன் அரசாணை பிறப்பிக்கப்பட்டும் கூட தமிழ் இன்னும் பயிற்றுமொழி ஆகவில்லை.

4. சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை அலுவல் மொழியாக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியும் கூட தமிழ் இன்னும் உயர்நீதிமன்ற அலுவல் மொழி ஆகவில்லை.

5. 1956-ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட தமிழ் ஆட்சி மொழிச் சட்டம் இன்னும் முழுமையாக  நடைமுறைக்கு வரவில்லை.

6. தமிழ்நாடு அரசின் அரசாணைகளில் முழுமையாக தமிழ் இல்லை.

7. ஆலயங்களில் தமிழ் ஒற்றை வழிபாட்டு மொழியாகவில்லை. சமஸ்கிருதத்தில் மட்டும் தான் வழிபாடு நடத்தப்படுகிறது. சில ஆலயங்களில் மட்டும் வலியுறுத்திக் கேட்டால் கூடுதலாக தமிழில் வழிபாடு செய்யப்படுகிறது.

8.   தமிழில் பெயர் பலகை வைப்பது தொடர்பாக 1983-ஆம் ஆண்டு முதல் 3 அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டும் கூட  கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளில் தமிழுக்கு உரிய இடம் இல்லை.

9. அன்றாட வாழ்வில் தமிழ் இல்லை. பெரும்பான்மையான வீடுகளில் அம்மா, அப்பா என்ற சொற்களே புழக்கத்தில் இல்லை. மம்மி, டாடி மட்டும் தான் புழக்கத்தில் உள்ளன.

10. தமிழ் இசைக்கு இடமில்லை; அதை வளர்ப்பதற்கான அமைப்புகள் உருவாக்கப்படவில்லை.

11. தமிழ் வளர்ச்சிக்காக தொடங்கப்பட்ட அமைப்புகளின் செயல்பாடுகள் வேகம் பெறவில்லை.

12. உலகில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் தமிழுக்கு இருக்கைகள் ஏற்படுத்தப்படவில்லை.

தமிழ்நாட்டில் தமிழின் இன்றைய நிலைக்கு ஏதேனும் ஒரு தரப்பை மட்டுமே குறை கூறுவதில் பயன் இல்லை. அடித்தட்டு மக்களில் தொடங்கி அரசு வரை அனைவரும் இந்த அவல நிலைக்கு பொறுப்பேற்க வேண்டும். தமிழ் மொழியில் பேச வேண்டும்; தமிழில் படிக்க வேண்டும் என்ற எண்ணம் தமிழராய் பிறந்த அனைவருக்கும் ஏற்பட வேண்டும்.

55 ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கு தமிழ் தான் காரணம் என்பதால்,  தமிழ் வளர்ச்சிக்குத் தேவையான நடவடிக்கைகளை  மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாட்டை ஆளும் அரசுகள் நினைக்க வேண்டும். அப்போது தான்  தமிழ்நாட்டில் அன்னை தமிழுக்கு உரிய மரியாதை கிடைக்கும். இது தான் மறுக்க முடியாத உண்மை.

இருளை பழிப்பதை விட விளக்கை ஏற்றுவது தான் சிறந்த செயல். அதனால் தான் தமிழ்நாட்டில் தமிழுக்கு உரிய இடத்தை பெற்றுத்தர வேண்டும் என்பதற்காக போராடி வருகிறேன். கடந்த 2004-ஆம் ஆண்டில் தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தைத் தொடங்கி தமிழ் வளர்ச்சிக்காக பல ஆண்டுகள் பல்வேறு நடவடிக்கைகளையும், போராட்டங்களையும் மேற்கொண்டேன். ஆனால், தமிழுக்கு இன்னும் உரிய இடமும், மரியாதையும் வழங்கப்படாத நிலையில், மீண்டும் இயக்கம் நடத்த வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

தமிழ்நாட்டில் தமிழ் மொழி தொடர்பான அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற வலியுறுத்தி,  ‘தமிழைத் தேடி’ என்ற தலைப்பில் பரப்புரை பயணம் மேற்கொள்ளவிருக்கிறேன். உலக தாய்மொழி நாளான பிப்ரவரி 21-ஆம் நாள் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் தொடங்கும் இந்த பரப்புரை பயணம் மதுராந்தகம், திண்டிவனம், புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம், திருச்சி, திண்டுக்கல் வழியாக சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் வரும் பிப்ரவரி 28-ஆம் நாள் நிறைவடையும். தமிழறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள், கல்வித்துறை, கலைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறையினர், மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என அனைத்து  தரப்பினரும் ‘தமிழைத் தேடி’ பரப்புரை பயணத்தில் பங்கேற்று ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்."

இவ்வாறு தனது தமிழைத் தேடி விழிப்புணர்வு பயணம் குறித்து மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Ramadoss Thamizhai thedi chennai to madurai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->