சந்திரயான்3 | வீரமுத்துவேல் எங்கள் மண்ணின் மைந்தர் என்பது எங்களுக்கு கூடுதல் பெருமை - டாக்டர் இராமதாஸ்!
Dr Ramadoss Wish To ISRO And VeeraMuthuvel
வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தை தொட்டது இந்தியா. சந்திரயான் 3 விக்ரம் லேண்டரை வெற்றிகரமாக தரையிறக்கி இஸ்ரோ சாதனை படைத்துள்ளது.
"இந்தியா, நான் என் இலக்கை அடைந்துவிட்டேன், நீங்களும் தான்" என்று, சந்திராயன் -3 அனுப்பிய செய்தியை இஸ்ரோ டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளது.
இந்நிலையில், நிலவில் சந்திரயான் 3-ஐ தரையிறக்கி சாதனை படைத்த தமிழர் தலைமையிலான அறிவியலாளர்களுக்கு பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "சென்னைக்கு அருகில் ஸ்ரீஹரிஹோட்டாவில் இருந்து ஜூலை 14-ஆம் தேதி தொடங்கிய சந்திரயான் 3 விண்கலத்தின் பயணம் 41 நாட்களுக்குப் பிறகு நிலவின் தென் துருவத்தில் நிறைவடைந்து சாதனையாக மாறியிருக்கிறது.
பதற்றம் நிறைந்த கடைசி 19 நிமிட தரையிறங்கல் நிகழ்வுக்குப் பிறகு விண்வெளி ஆராய்ச்சியில் சாதனை படைத்த நாடுகள் பட்டியலில் இந்தியாவின் பெயர் பொன்னெழுத்துக்களால் பதிக்கப்பட்டிருக்கிறது.
இதன் மூலம் நிலவில் தடம் பதித்த உலகின் நான்காவது நாடு, நிலவின் தென் துருவத்தை சென்றடைந்த முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.
இந்த சாதனையை படைத்த குழுவின் தலைவரான வீரமுத்துவேல் எங்கள் விழுப்புரம் மாவட்ட மண்ணின் மைந்தர் என்பது எங்களுக்கு கூடுதல் பெருமை.
சாதனைக்கு காரணமான அனைவருக்கும் எனது வாழ்த்துகளும், பாராட்டுகளும். நிலவுக்கு மனிதனை அனுப்பும் இந்தியாவின் முயற்சியும் வெற்றி பெற வாழ்த்துகள்" என்று மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.
English Summary
Dr Ramadoss Wish To ISRO And VeeraMuthuvel